நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களையே சில திமுக வேட்பாளர்கள் தோற்கடித்தனர். எங்கெங்கே? பார்க்கலாம்.


நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியிருந்தது. வெற்றிபெற்ற அனைவரும் மார்ச் 2ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். 


அதில் மாநகராட்சி மேயர் பொறுப்புகள் அனைத்தையும் திமுக எடுத்துக்கொண்டதோடு, துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தது. இதையடுத்து, மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர்,  நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. 


இன்று காலை தேர்தல் ஆரம்பித்த நிலையில், பல இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், வேட்பாளர்களை எதிர்த்து திமுகவினரே வேட்புமனுத் தாக்கல் செய்து வெற்றிபெற்றனர். இதனால் கூட்டணிக் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளதோடு, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து மற்றொரு கோஷ்டி திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.


மீஞ்சூர் பேரூராட்சியில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தலைவர் பதவிக்கு சுமதி தமிழ் உதயன் என்பவரை திமுக, தனது அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்திருந்த நிலையில், 11-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. அதிருப்தி வேட்பாளர் ருக்மணி மோகன்ராஜ், சுமதி தமிழ் உதயனுக்கு எதிராக வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதில் அதிருப்தி வேட்பாளர் ருக்மணி மோகன்ராஜ் 9 வாக்குகள் பெற்றார். சுமதி தமிழ்உதயனும் 9 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், 1 வாக்கு தேர்தல் அலுவலர் அறிவித்த விதிகளுக்குப் புறம்பாக சிவப்பு மைக்கு பதிலாக நீல மையில் போடப்பட்டதால் அது செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. இதனால் ருக்மணி மோகன்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


செய்யாறு நகராட்சிக்கு வழக்கறிஞர் விஸ்வநாதன் என்பவரை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்திருந்தது. தேர்தல் நாளான இன்று விஸ்வநாதன் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் அவரை எதிர்த்து  போட்டி வேட்பாளராகக் களமிறங்கிய மோகன வேலு என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், 16 வாக்குகள் பெற்று மோகனவேலு வெற்றி பெற்றார். திமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் விஸ்வநாதன் 11 வாக்குகள் பெற்றுத் தோல்வி அடைந்தார். 


உசிலம்பட்டி நகராட்சிக்கு க.செல்வி என்பவரை வேட்பாளராக அறிவித்தது திமுக தலைமை. ஆனால், தலைமையின் உத்தரவை மீறி 10ஆவது வார்டில் வெற்றிபெற்ற செல்விக்குப் போட்டியாக, 11வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சகுந்தலா விருப்ப மனு அளித்தார். இதனால், தேர்தலைப் புறக்கணித்து செல்வி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சகுந்தலா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். 


மாநகராட்சியிலும் போட்டி


மாநகராட்சிகளுக்குப் பெரும்பாலும் திமுக தலைமை அறிவித்தவர்களே போட்டியிட்ட நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குத் திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக மற்றொருவர் போட்டியாக களமிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மகாலட்சுமி யுவராஜ் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு போட்டியாக சூர்யா ஷோபன் குமார் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். முடிவில் 29 வாக்குகள் பெற்று மகாலட்சுமி யுவராஜே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சூர்யா ஷோபன் குமார் 20 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.


கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக சுந்தரி என்பவரை அறிவித்தது திமுக தலைமை. வேட்புமனுத் தாக்கலின்போது சுந்தரிக்குப் போட்டியாக கீதா குணசேகரன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.  எனினும், வாக்களித்த 32 பேரில் 20 வாக்குகளைப் பெற்று சுந்தரி வெற்றிபெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட அதிருப்தி வேட்பாளர் கீதா குணசேகரன் தோல்வி அடைந்தார்.


அதேபோல செய்யாறு நகராட்சித் துணைத்தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலிலும், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு மாறாக, எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். துணைத்தலைவர் பதவிக்கு பேபி ராணியை தலைமை வேட்பாளராக அறிவித்திருந்தது. ஆனால், மதியம் நடைபெற்ற தேர்தலின்போது இப்பதவியை எதிர்பார்த்திருந்த மற்றொருவரான குல்சார் என்பவரும் போட்டியாக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.  இந்த தேர்தலில் குல்சார் 15 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிகாரப்பூர்வ வேட்பாளரான பேபி ராணி 12 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.