*திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு*

 

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பணியாற்றும் திருசுந்தரர்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இடையூறு செய்கின்றனர். இதனால் பக்தர்களுக்கும், திருசுந்தரர்களுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி இந்த வழக்கில் நீதிமன்றம் தாமாக முன்வந்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரை இந்த மனுவில் சேர்க்கிறது.

 

* திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர், தக்கார் ஆகியோர் கோயிலுக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி,  சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

 

* திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு காவல்துறை தலைவர், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது.

 

* துணை கமாண்டன்ட் பதவிக்கு குறையாத அதிகாரியை நியமித்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், கோவில் பணியாளர்கள் ஆகியோரை வழிநடத்தி கோவிலில் ஏற்படும் கூட்டத்தை கட்டுப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

 

* கோவிலின் உள்ளே செல்லும் வழி மற்றும் வெளியே செல்லும் வழிகளில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

 

* திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவலில் இருக்கும் சிறப்பு காவல் படையினருக்கு என சிறப்பு காவல் நிலையம் அமைத்து கோவிலில் ஏற்படும் பிரச்சினைக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

 

மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை செயல்படுத்தியது குறித்து திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், தக்கார், தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 

 



 

 









*பள்ளியின் பியூனானாலும், தலைமை ஆசிரியரானாலும், அலுவலரானாலும் புகார் எழுந்தால், முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாலியல் தொந்தரவு புகார்களுக்கு மட்டுமின்றி எந்த புகார் எழுந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். - மதுரைக்கிளை*

 

*அனைத்து நிலைகளில் உள்ள அலுவலர்களும் சமமானவர்களே. யாரும் மேலானவர்களோ, கீழானவர்களோ இல்லை - மதுரைக்கிளை நீதிபதி*

 

ஆசிரியர் பணி இட மாறுதல்கள், அதற்கான கலந்தாய்வு தொடர்பான வழக்குகள்,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தன.

 

ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "IPL கிரிக்கெட் வீரர்களைப் போல ஆசிரியர் பணியிடமாற்றமும், லட்சகணக்கில் ஏலம் விடப்படுகிறதா?நீதித்துறை மற்றும் கல்வித்துறையின் நலன் கருதி, ஆசிரியர் பணியிடமாற்றத்திற்கு லஞ்சம் பெறப்படுகிறதா? என்பது குறித்த அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என குறிப்பிட்டு  பள்ளிகல்வித்துறை செயலர், லஞ்ச ஒழிப்பு  பிரிவு  இயக்குர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், பள்ளியின் பியூனானாலும், தலைமை ஆசிரியரானாலும், அலுவலரானாலும் புகார் எழுந்தால், முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாலியல் தொந்தரவு புகார்களுக்கு  மட்டுமின்றி எந்த புகார் எழுந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து நிலைகளில் உள்ள அலுவலர்களும் சமமானவர்களே. யாரும் மேலானவர்களோ, கீழானவர்களோ இல்லை" என கருத்து தெரிவித்தார். மனுதாரர் மற்றும் அரசுத்தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.இதையேற்ற நீதிபதி வழக்கை மார்ச் 8ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.