நாடாளுமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 -ம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஜூன் 4 அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் தற்போது களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாமக வேட்பாளர்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பாமக ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதனை தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
வானிலை ரமணன் வாழ்த்து
அப்போது செம்பனார்கோயில் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வேட்பாளர் ம.க ஸ்டாலினை சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ”ம.க.ஸ்டாலின் இன்றோ நேற்றோ எனக்கு பரீட்சையமானவர் அல்ல ஆரம்ப கால முதலே நட்பு அதிகம், ம.க. ஸ்டாலின் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். இதனை தான் கல்லூரி பயின்ற காலத்தில் கண்கூடாக கண்டுள்ளேன். இப்பேற்பட்ட மனிதர்களை பார்ப்பது அரிது. எனது நண்பரான ம.க. ஸ்டாலின் நிச்சயமாக தேர்தலில் வெற்றி அடைவார். அவர் வெற்றி வேட்பாளர்” என அரவணைத்து பாராட்டினார். முன்னதாக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வானிலை ரமணனுக்கு சால்வை அணிவித்து வணங்கி ஆசி பெற்றார்.
தொகுதி விபரம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 - மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.