கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய பள்ளி உணவு திட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளார்.






இது தொடர்பான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”குழந்தைகள் நன்கு கற்க, அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.


வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் தேசிய பள்ளி உணவுத் திட்டம் சேர்க்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் பட்ஜெட் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் அமைச்சர் ஜென்னா சுட்ஸ் ஆகியோருடன் ஜஸ்டின் ட்ரூடோ இன்று டொராண்டோவில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இத்திட்டம் ஆண்டுக்கு 4,00,000 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


இந்த தேசிய உணவு திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளது. பள்ளிக் கல்வியானது கூட்டாட்சி அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றாலும், மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூட்டுசேர்வதற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் நோவா ஸ்கோடியா ஆகிய நாடுகள் பள்ளி மதிய உணவுகளுக்கு நிதியை ஒதுக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கனடா அரசாங்கம் நீண்ட காலமாக இத்தகைய திட்டத்தை தொடங்குவதாக உறுதியளித்தது.   






இந்நிலையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினர் தங்கள் தற்போதைய பள்ளி உணவுத் திட்டங்களை விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் அதிகமான குழந்தைகள் தங்களுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.