தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனைத்து கட்சியின் தலைவர்களும் தங்களது கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ளது மேட்டூர் சட்டமன்ற தொகுதி. தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். சௌமியா அன்புமணிக்காக அவரது மகள்கள் சங்க மித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் இன்று மேட்டூர் அருகே மேச்சேரி பொட்டனேரி, கருமலைகூடல் ஆகிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். டீக்கடை, காய்கறி கடை, பூக்கடை என பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் தனது அம்மாவிற்கு மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.



மேலும் பாமக எம்எல்ஏ சதாசிவம், மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் மேச்சேரி அருக ஆஞ்நேயர் கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கருமலைகூடல் மேட்டூர், சேலம் கேம்ப் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி, மாம்பழ சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த வாக்கு சேகரிப்பின்போது பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் உடன் சென்றனர்.