நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகரும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளருமான வாகை சந்திரசேகர் மேலப்பாளையம் பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுவையில், 


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஒரு சிறந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தந்து கொண்டு இருக்கிறார். அதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் ஒரு ஆட்சி வேண்டும். அது மீண்டும் எங்களுக்கு தான் வேண்டும் என்று பிஜேபியை சேர்ந்தவர்கள் எல்லாம் இந்தியா முழுக்க கூக்குரலிட்டு கொண்டிருக்கிறார்கள். வரக்கூடிய தேர்தல் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.  இன்னும் சொல்லப்போனால் இனி பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடக்காது. இராணுவ ஆட்சி போல, சர்வாதிகார ஆட்சியாக இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்ற அளவிற்கு ஒரு கொடூரமான முடிவிற்கு வந்தால்  கல்தோன்றி மண் தோன்றா மூத்தக்குடி தமிழுக்கு என்ன மரியாதை இருக்கிறது? பயங்கரமான ஒரு சூழல் வந்து கொண்டிருக்கிறது.


நமது சுதந்திரம் முழுமையாக பறிக்கப்படும்.  இப்படி ஒரு பேராபத்து பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் கூட வந்தது இல்லை.  ஆனால்  இன்று இந்த ஆபத்தை பெரியாராக, அண்ணாவாக, கலைஞராக நின்று அதனை முறியடித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். எனவே நாம் 40 க்கு 40 வெற்றி பெற்றால்தான் மத்தியில் பாஜக ஆட்சியை அகற்ற முடியும். இந்த பேராபத்தில் இருந்து இந்தியாவை காக்க இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்புரூஸை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார். 


தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின்  ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் என்று கூறினாரோ அதனை செய்துள்ளார். நாம் செலுத்தும் வரியில் இருந்து 1 பைசா கூட திரும்பி வரவில்லை. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, அழிக்கப்பட்டுவிடும். எனவே ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். மக்களின் கலாச்சாரம் காக்கப்பட வேண்டும். எனவே இந்த தேர்தலில் நாம் இந்தியாவை காப்பாற்ற வேண்டும், ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.  தொடர்ந்து பன்முக எழுத்தாளர் ஆண்டாள்பிரியதர்ஷினி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.