தெலங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றும் வரும் நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி முகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் நவம்பர் முதல் வாரம் வரை தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரங்கள் களைக்கட்டியது. தொடர்ந்து நவம்பர் மாதத்தில் பல்வேறு தேதிகளில் இந்த 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இன்று தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் நாளை எண்ணப்படுகிறது.
இதில் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது அக்கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது. அந்த வெற்றியின் உத்வேகத்தால் 5 மாநில தேர்தல்களிலும் அக்கட்சியின் தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்றினர்.
119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் தேசிய ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய 3 கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவியது. அங்கு பெரும்பான்மைக்கு தேவையான 60 தொகுதிகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி முன்னிலை இருந்து வருகிறது. டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. தெலங்கானாவில் தற்போதைய முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே சில தொகுதிகள் வித்தியாசத்தில் மட்டும் தான் இழுபறி நீடிப்பதால் அங்கு யார் வெற்றிப் பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேசமயம் தாங்களும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக தொண்டர்களும் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சுடச்சுட சாப்பாடு தயாராகும் வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் படிக்க: Election Results 2023 LIVE: 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்: உடனுக்குடன் தெரிந்து கொள்ள லைவ் அப்டேட்