பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதி மக்களவை உறுப்பினருமாகவும் இருப்பவர் கவுதம் கம்பீர். நாடு முழுவதும் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் தேர்தலில் கவுதம் கம்பீர் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.


கம்பீர் கோரிக்கை:


இந்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் போட்டித் தொடர்களில் கவனம் செலுத்த உள்ளதால் அரசியல் பணியில் இருந்து என்னை விடுவிக்குமாறு பா.ஜ.க. தலைவர் நட்டாவை கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் மனமார்ந்த நன்றி. ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார். 


அரசியலில் இருந்து விலகுகிறாரா கம்பீர்?


இதன்மூலம் அரசியலில் இருந்து நிரந்தரமாக கவுதம் கம்பீர் விலகப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும், பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரராக திகழ்ந்தவர் கவுதம் கம்பீர். 42 வயதான இவர் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வில் இணைந்த சில காலத்திலே அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு அளித்தது.






2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் கம்பீர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, ஆம் ஆத்மியைச் சேர்ந்த அதிஷி மர்லேனா ஆகியோர் போட்டியிட்டனர். தனது கிரிக்கெட் புகழ் மற்றும் பா.ஜ.க. செல்வாக்கை பயன்படுத்தி கம்பீர் அந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றார்.


அறிமுக தேர்தலிலே கம்பீர் 6 லட்சத்து 96 ஆயிரத்து 158 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் லல்வி 3 லட்சத்து 4 ஆயிரத்து 934 வாக்குகள் பெற்றார். ஆம் ஆத்மி வேட்பாளர் 2 லட்சத்து 19 ஆயிரத்து 328 வாக்குகள் பெற்றார். வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரான பின்பு கவுதம் கம்பீர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


கட்சி மேலிடம் அதிருப்தி?


ஆனால், அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஐ.பி.எல். தொடர், இந்திய அணி பங்கேற்கும் தொடர்களில் விமர்சகர் என்று கிரிக்கெட் பணிகளிலே தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். இதனால், அவரது செயல்பாடு குறித்து கட்சி மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெறும் சமயத்தில் ஐ.பி.எல். தொடரும் நடைபெற இருப்பதால் கம்பீர் ஐ.பி.எல். தொடரிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள உள்ளார்.


குறிப்பாக, தான் சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா அணிக்காகவே அவர் பயிற்சியாளராக இந்த ஐ.பி.எல். தொடரில் களம் இறங்க உள்ளார். இதன் காரணமாகவும் அவர் அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாகவே அவர் தன்னை விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், கம்பீரின் அரசியல் செயல்பாடுகளில் திருப்தியில்லாத கட்சித் தலைமையிடம் அவருக்கு வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்ப வழங்க விருப்பம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் கம்பீர் தன்னை விடுவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க: Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல்! பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாட்டிற்கு வந்த துணை ராணுவம்!


மேலும் படிக்க: Lok Sabha Election 2024: தேமுதிக - அதிமுக கூட்டணி உறுதி; முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வேலுமணி பேட்டி