நாடு முழுவதும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு:
இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் அதிகாரிகள், வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் துணை ராணுவ படையினர் ஈடுபடுவது வழக்கம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக சென்று கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பணிக்காக 25 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று ஏற்கனவே தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ தெரிவித்து இருந்தார்.
தமிழகம் வந்த துணை ராணுவம்:
இதையடுத்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் துணை ராணுவ படையினர் வந்து கொண்டிருக்கின்றனர். முதற்கட்டமாக நேற்று 15 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் வந்தனர். சென்னைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மங்களூரில் இருந்து ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். சென்னை வந்த துணை ராணுவத்தினர் புதுப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி, சென்னைக்கு 2 கம்பெனி துணை ராணுவ படையினரும், ஆவடி மற்றும் தாம்பரத்திற்கு 1 கம்பெனி துணை ராணுவத்தினரும், கோவைக்கு 3 கம்பெனி துணை ராணுவத்தினரும் என நேற்று வரை 7 கம்பெனியினரும் வந்துள்ளனர். இன்று 8 கம்பெனி துணை ராணுவத்தினரும் பங்கேற்றுள்ளனர்.
10 கம்பெனிகள்:
தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவத்தினரும் வரும் 7-ம் தேதி ( வியாழக்கிழமை) தமிழ்நாடு வர இருக்கின்றனர். பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பாதுகாப்பு படையினர், வாக்குப்பதிவு முடிந்த பிறகே மீண்டும் அவர்களது பட்டாலியனுக்கு திரும்புவார்கள். ஒவ்வொரு கம்பெனியிலும் 90 வீரர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பதற்றம் நிறைந்த பகுதி உள்பட மக்களவைத் தேர்தலில் மிக முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஆயுதம் ஏந்தி ஈடுபடுவார்கள். தமிழ்நாட்டில் பதற்றம் நிறைந்த பகுதிகள் பட்டியலை இதுவரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அந்த பட்டியல் வெளியான பிறகு அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதுபோன்ற பகுதிகளில் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு போலீசாரும் ஈடுபடுவார்கள். வட இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்பதால் அங்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் படிக்க: PM Modi: ”I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் 3 குரங்குகளை போன்றுதான்..” : பிரதமர் மோடி கடும் விமர்சனம்
மேலும் படிக்க: Chennai Metro Rail: அதிக பயணிகளை ஈர்க்கும் சென்னை மெட்ரோ! குவியும் பயணிகள், நீளும் சேவைகள் - பிப்ரவரியில் எவ்வளவு பேர்?