2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக தலைமையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக தனது தலைமையில் கூட்டணியை அமைக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றது. இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் முன்னாள அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி மற்றும் அதிமுக பொறுப்பாளர் பெஞ்சமின் ஆகியோர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரமலதா விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 


அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணியிடம் அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இருவரும் (அதிமுகவும் தேமுதிகவும்) சந்தித்து பேசியிருக்கின்றோம் என்றால், நீங்களே புரிந்து கொள்ளுங்கள்ள வேண்டாமா” என்பது போல் பதில் அளித்தார். மேலும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளோம். இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். குழு அமைக்கப்பட்ட பின்னர் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது என கூறினார். 


கேப்டன் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். கேப்டனின் வழிகாட்டுதலின் படி, யார் அதிகமாக எங்களுக்கு தொகுதி கொடுக்கிறார்களோ அவர்களுக்குடன் தான் எங்களின் கூட்டணி இருக்கும். அதிமுக அல்லது பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு ராஜ்ஜிய சபா மற்றும் லோக் சபாவுக்கு அதிக இடங்களை ஒதுக்குகிறார்களோ அவர்களுடன் களம் காண தயாராக உள்ளோம். 2014ம் ஆண்டு நடைபெற்றது போல் 14 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் யார் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம். 

 

தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாகவோ மறைமுகமாகவோ யாரிடமும் நாங்கள் பேசவில்லை. இனிமேல் தான் தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் என கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் கூறினார். அதன் பின்னர் மாவட்டச் செயலாளர்கள் இவ்வாறு கூறியதாக தெளிவான விளக்கமும் கொடுத்திருந்தார். 

 

மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக இன்னும் தனது தலைமையிலான கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், தேமுதிகவை அதிமுக தங்களது கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது.