தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நாளான நேற்று மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜகவைச் சேர்ந்த பூத் ஏஜேண்ட் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதை கண்டித்து திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குபதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.






அதைதொடர்ந்து, சிறிதுநேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்டை வாக்குபதிவு மையத்திலிருந்து அப்புறப்படுத்தியதை அடுத்து வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது. இதன் காரணமாக அல்-அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து காவல்துறையினர் அங்கு கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த வாக்குச் சாவடியில் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.



இந்நிலையில் நேற்று அல் அமீன் பள்ளியில் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிரி நந்தன்  என்பவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கிரி நந்தன்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 4.3.22 ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.








இது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..,”  மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பி.ஜே.பியை சேர்ந்த  வேட்பாளர் ர.அம்சவேணி என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்குச்சாவடி முகவராக அவருடைய மகன் கிரி நந்தன் வயது 43 என்பவர் வாக்குச்சாவடி எண் 27 அல்-அமீன் பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை அடுத்து காலை 8;30 மணியளவில் அங்கு வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளரின் முகத்திரையை (ஹிஜாப்) விலக்கக் கோரி பிரச்னையை எழுப்பியுள்ளார். உடனடியாக அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் அவரை வெளியேற்ற உத்தரவிட்டனர். அதனடிப்படையில் அவரது கட்சி நிர்வாகிகள் அவரை பணியில் இருந்து விடுவித்து வேறு ஒருவரை வாக்குச்சாவடி முகவராக நியமித்தனர். மேலும் மேற்படி அங்கு பணியில் இருந்த தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில் மேற்படி கிரி நந்தன்  என்பவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கிரி நந்தன்  என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்பு மேற்படி கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த கணம் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 4.3.22 ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.