நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் 195 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. இந்த வேட்பாளர்கள் பட்டியலில் திரைத்துறை பின்புலம் கொண்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றது.
சுரேஷ் கோபி:
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான சுரேஷ் கோபி, மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு பாஜக கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். இந்நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக களம் இறங்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இவர் கேரள மாநிலம், திருச்சூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஹேமா மாலினி:
பாலிவுட் நடிகையான ஹேமா மாலினி 2003 ஆம் ஆண்டு பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜக சார்பில் உத்திரபிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மீண்டும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.
இதையடுத்து, நான்கு போஜ்புரி திரைப்பட நடிகர்களான ரவி கிஷன், மனோஜ் திவாரி, தினேஷ் லால் யாதவ் 'நிர்ஹுவா' மற்றும் பவன் சிங் ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்:
மக்களவை தேர்தலுக்கான, முதற்கட்மாக 195 தொகுதிக்கான வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டது.
அதில் உத்தரப் பிரதேசத்தில் 51 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 20, இடங்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 24 இடங்களுக்கும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15 இடங்களுக்கும், கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அசாமில் 11, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11 இடங்களுக்கும், டெல்லியில் இருந்து 5 இடங்களுக்கும், ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களுக்கும், உத்தரகாண்டில் 3 இடங்களுக்கும், அருணாச்சல பிரதேசத்தில் 2 இடங்களுக்கும் மற்றும் கோவா, திரிபுரா, அந்தமான் & நிக்கோபார் மற்றும் டையூ & டாமனில் இருந்து தலா ஒரு இடங்களுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 47 இளைஞர் வேட்பாளர்கள், 28 பெண்கள், 27 எஸ்.சி வேட்பாளர்கள், 18 எஸ்.டி வேட்பாளர்கள் மற்றும் 57 ஓபிசி வேட்பாளர்கள் உள்ளனர் என பாஜக தெரிவித்துள்ளது.