ஆங்கில மீடியத்தில் தனியார் பள்ளிகளில் 2-வது மொழியாக பெங்காலியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேற்கு வங்க கேபினட் அமைச்சரவை இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த கல்வி ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து மேற்கு வங்க மூத்த உயர் அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, ’’மேற்கு வங்க மாநிலத்தில் பெங்காலியை இரண்டாவது மொழியாகப் படிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாணவர்கள் இந்தி அல்லது பிற மொழிகளைத்தான் தேர்வு செய்கின்றனர். இதனால், பெங்காலியை மாநில மாணவர்கள் முறையாகக் கற்பிப்பதில்லை. இன்று மாநில கேபினெட் அமைச்சரவை இதை மாற்ற முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளிலும் பெங்காலி மொழி கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. 


இதையும் வாசிக்கலாம்:  CM Breakfast Scheme: அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலைச் சிற்றுண்டி; விரிவுபடுத்த ஆணை- விவரம்!


கட்டணக் கொள்ளையைத் தடுக்க கல்வி ஆணையம்


அதேபோல தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த கல்வி ஆணையம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை சரமாரியாக உயர்த்தி விட்டதாக எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதேபோல பாடத் திட்டம் பற்றியும் தேர்வுகள் நடத்தப்படும் முறைகள் குறித்தும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும், புதிதாக அமைக்கப்படும் கல்வி ஆணையம் தீர்வு காணும்’’ என்று மூத்த உயர் அதிகாரி தெரிவித்தார். 


திரிணமூல் காங்கிரஸின் இந்த நடவடிக்கைக்கு பெங்காலி மொழி அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இவை தவிர இன்னும் சில முடிவுகளையும் மேற்கு வங்க கேபினட் அமைச்சரவை எடுத்துள்ளது. இவை அனைத்தும் 15 நாட்கள் கால அவகாசத்துக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.  


பின்னுக்குத் தள்ளப்படும் மாநில மொழிகள்


பள்ளிகளில் முதல் மொழியாக ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படும் நிலையில், மாநில மொழிகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் 2ஆவது மொழியாக, மேற்கு வங்கத்தில் பெங்காலி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 


இதையும் வாசிக்கலாம்: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி; 5-ம் வகுப்பே படித்த அப்பள வியாபாரியின் நெகிழ்ச்சி செயல்!