மதுரை மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்த நிதி அளித்த அப்பள வியாபாரியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா.


மதுரை தத்தனரி பகுதியில் அப்பளம், வத்தல் வியாபாரம் செய்து வருபவர் ராஜேந்திரன். 86 வயதான இவர், கடந்த 2018 -ல் மாநகராட்சி திரு.வி.க. பள்ளியில் 10 புதிய வகுப்பறைகள், இறைவணக்க கூடம் உள்ளிட்டவற்றைத் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். ரூ.1.10 கோடி ரூபாய் நிதியை இதற்காக செலவழித்துள்ளார்.

 

அதைத் தொடர்ந்து அண்மையில் கைலாசபுரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.71.45 லட்சம் செலவில் 4 வகுப்பறைகள், கழிப்பறை, உணவுக்கூடம் ஆகியவற்றை கட்டிக் கொடுத்துள்ளார். இதையறிந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, அப்பள கம்பெனிக்கு நேரில் வந்து ராஜேந்திரனைச் சந்தித்தார். அவரை ஆரத்தழுவி, பொன்னாடை போர்த்தி, திருக்குறள் நூல் அளித்து பாராட்டு தெரிவித்தார்.
 


 






 

தொடர்ந்து சாலமன் பாப்பையா கூறுகையில், "அண்மையில் நான் பயின்ற மாநகராட்சிப் பள்ளிக்கு நானும் ரூ.20 லட்சம் நிதி அளித்தேன். என்னைப் பொறுத்தவரை, நான் அந்தப்பள்ளியில் படித்தேன், அதனால் கொடுத்தேன். ஆனால், ராஜேந்திரன் வெறும் 5ஆம் வகுப்பு மட்டும் படித்து விட்டு இவ்வளவு நிதியை பள்ளிகளுக்கு கொடுத்துள்ளார். அது போற்றத்தக்க செயல் என நினைத்தேன். அவரை நேரில் வந்து அவரை வாழ்த்தினேன். எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

 

ராஜேந்திரன் கூறும்போது, ’’கடவுள் கொடுப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

 

அரசுப் பள்ளிளின் முன்னேற்றத்திற்காக தன்னுடை சொந்தப் பணத்தைக் கொண்டு ராஜேந்திரன் உதவி வருவதை, பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 


 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.