முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
பள்ளிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் (Free Breakfast Scheme), அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 1 - 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை, முதலமைச்சர் மதுரையில் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக 2022-23ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டமானது 2023-24ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 25 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
திட்டத்தின் நோக்கம் என்ன?
* மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல்
* மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்தல்
* மாணவர்கள் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல்
* பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக்கொள்ளுதல்
* வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையைக் குறைத்தல்
ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்றும் நோக்குடன் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, 1,978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டால், மொத்தம் உள்ள 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 15,75,900 மாணவர்கள் பயனடைவார்கள். ரூ.404 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் ரூ.12.71 செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
என்ன உணவு? எவ்வளவு?
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் 100 மி.லி. காய்கறிகளுடன் சாம்பார் மற்றும் 150-200 கிராம் உணவு வழங்கப்படும்.வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களைக் கொண்டு காலை உணவு வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. திட்டத்தின் விரிவாக்க விழா, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று சமூக நலத்துறை இயக்குநருக்கு, அரசு முதன்மைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.