எந்த பட்டப்படிப்பிலும் சேராமல் ஆன்லைன் தேர்வு வாயிலாக தேர்வு எழுதி பட்டம் பெற முயன்ற 117 பேரின் முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 1980 ம் ஆண்டு முதல் அரியர் வைத்தவர்கள் தேர்வெழுத 2020 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்றதாகவும், தொலைத்தூர கல்வி நிறுவனங்கள் தலா ரூ. 3 லட்சம் வரை பெற்றுக்கொண்டு உதவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முன்னர் செமஸ்டர் கட்டணம், பருவத் தேர்வு கட்டணம் கட்டிவிட்டார்களா என்று சோதனை மேற்கொண்டபோது, இந்த மோசடி வெளியானதாக கூறப்படுகிறது. இதுபோல், வேறுயாரும் பட்டம் பெற முயற்சி செய்து இருக்கிறார்களா என்ற அடிப்படையில் ஆய்வு நடத்த விசாரணைக்குழு அமைத்து துணைவேந்தர் கௌரி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2019 ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில் அரியர் வைத்திருப்பவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதில், கடந்த 1980 ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 2019, மே 2020 ஆகிய பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுக்கொள்ள கடைசி வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், சிறப்புத் தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உடனடியாக பட்டம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பட்டப்படிப்பில் இருந்து விலக நினைக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் தேர்ச்சி பெற்ற பாடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் சான்றிதழோ அல்லது பட்டயச் சான்றிதழோ வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதேபோல், முதுநிலைப் படிப்பில் இடைநிற்கும் மாணவர்களுக்கு முதுநிலை பட்டய சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
‛ஆசிர்வாதம் பண்ணுங்க ஆண்ட்டி...’ -பாட்டிக்கு ‛பாயாசம்’ போட்டு நகையை லபக்கிய பாசக்கார பெண் கைது!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்