சென்னையில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டுத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். 


சென்னை ராயபுரம் பீ.வி.கோவில் தெருவைச் சேர்ந்த மூதாட்டி கனகவள்ளி(85). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 7ஆம் தேதி மூதாட்டி கனகவள்ளி, வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் பேத்தி சியாமளா வந்து பார்த்தபோது மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை மயக்கம் தெளியவைத்து விசாரித்தபோது, அவர் அணிந்து இருந்த 5 சவரன் தங்க நகையும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.   இதையடுத்து கனகவள்ளி ராயபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். 


தகவல்றிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.  அப்போது விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பத்மாவதி (53) என்ற பெண், தனக்கு பாயாசம் கொடுத்ததாகவும் அதன்பின்னரே தான் மயங்கியதாகவும் மூதாட்டி தெரிவித்துள்ளார். 


இதையடுத்து பத்மாவதியை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர், மூதாட்டி கனகவள்ளிக்கு மயக்க மருந்து கலந்த பாயாசத்தை கொடுத்து நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பத்மாவதியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் விசாரணையில், கடந்த 3ஆம் தேதி கனகவள்ளி, ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த பத்மாவதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாசமாக பேசி பழகிய பத்மாவதியை மூதாட்டி கனகவள்ளி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார். அப்போது கனகவள்ளி தனியாக வசிப்பதை அறிந்து கொண்ட பத்மாவதி அவரிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். 


இதையடுத்துதான் கடந்த 7ஆம் தேதி மீண்டும் மூதாட்டி கனகவள்ளி வீட்டுக்கு பத்மாவதி சென்றுள்ளார். தனக்கு திருமணநாள் என்று கூறி கனகவள்ளியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். மேலும், பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து மூதாட்டிக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த மூதாட்டி கனகவள்ளி மயங்கினார்.


உடனே அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, வளையல் என 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டார். அதன்பிறகே போலீசில் புகார் செய்யப்பட்டு பத்மாவதி கைது செய்யப்பட்டுள்ளார்.


பத்மாவதி ஏற்கனவே இதேபோல் கொருக்குப்பேட்டையில் கைவரிசை காட்டி உள்ளார். பத்மாவதியின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தனது நகைகள் அனைத்தையும் அடகு வைத்துவிட்டார். அந்த நகையை திருப்ப பணம் தேவைப்பட்டதால் இதுபோல் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து நகை கொள்ளையில் ஈடுபட்டதாக பத்மாவதி வாக்குமூலம் அளித்துள்ளார். 


இதனிடையே புதுச்சேரியில் வயதான தம்பதியை கொலை செய்து வெளிநாட்டு கரன்சி, நகைகளை கொள்ளையடித்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.