94 வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய படங்களின் பட்டியலில் மொத்தம் 14 படங்கள் இடம்பெற்றன. அதில் தமிழில் இருந்து யோகிபாபு நடித்த ‘ மண்டேலா’ , கூழாங்கல், மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான நயாட்டு, பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் உருவான ஷெர்னி திரைப்படம், விக்கி கவுசல் நடிப்பில் உருவான சர்தார் உத்தம் உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தப் படங்களில் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட இயக்குனர் திரு. ஷாஜி N கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட தேர்வுக்குழு கூழாங்கல் திரைப்படத்தை தேர்வு செய்தது.
விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் முன்னதாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா 2021 -ல் 'டைகர்' விருது உட்பட பல விருதுகளை வெற்றிருந்த நிலையில், இந்தப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரிடத்திலும் கவனம் பெற்றது.
இந்த நிலையில் தற்போது கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன் ‘ சோகம்’ என்று பதிவிட்டதோடு, “ எங்களது படம் இவ்வளவு தூரம் வந்ததே மிகப் பெரிய சாதனை. ஆம்..! ஆனால் இன்னும்.. ஒரு வேளை எங்கள் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் எங்களைப் போன்ற தனித்துவமான சினிமா தயாரிப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அது கொண்டு வந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சினிமா வட்டாரத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த விருதாக பார்க்கப்படும் ஆஸ்கார் விருதை இதுவரை எந்த இந்தியப் படமும் வென்றதில்லை. முன்னதாக மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு, ஹிந்தியில் வெளியான கல்லி பாய் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்தப் படங்கள் ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.