ஜூன் மாத அமர்வுக்கான யுஜிசி நெட் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரேகட்டமாக நடத்தப்பட்டது. 2021 டிசம்பர் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெற்றன. இதற்கிடையே 2022 ஜூன் தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற்றன. அதேபோல 2022 டிசம்பர் தேர்வுகள் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெற்றன.
இதையும் வாசிக்கலாம்: School Age : 3 வயதுக்கு முன்னால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதம்: நீதிமன்றம் அதிரடி
ஜூன் மாதத்தில் நடைபெற்ற தேர்வு
இதைத் தொடர்ந்து 2023 ஜூன் மாத உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு ஜூன் 13 முதல் 22ஆம் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 6.39 லட்சம் பேர் எழுத விண்ணப்பித்த நிலையில் 4.62 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதினர். நாடு முழுவதும் 181 நகரங்களில் தேர்வு நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தேர்வு நடைபெறுவது வழக்கம் ஆகும்.
இந்த நிலையில், இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 24-ம் தேதி வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் வெறும் 37,241 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது 10 சதவீதம் பேர் கூடத் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் நெட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
இதைத் தேர்வர்கள் ugcnet.nta.nic.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சான்றிதழைப் பெறுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் ugcnet@nta.ac.in அல்லது ecertificate@nta.ac.in என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணை தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
தேர்வர்கள் இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
இதையும் வாசிக்கலாம்: TNEA Counselling: மாணவர்களே.. பொறியியல் துணைக் கலந்தாய்வு; கல்லூரியைத் தேர்வுசெய்ய இன்றே கடைசி!