பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வுசெய்ய இன்றே கடைசித் தேதி ஆகும்.


தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற 442 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு  1.60 லட்சம் இடங்களுக்கு பொறியியல் சேர்க்கையை நடத்தி வருகின்றன. ஒற்றைக் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் விண்ணப்பிக்க 1,60,780 பொறியியல் இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுப் பிரிவுக்கு 1,48,721 இடங்களும் 7.5 சதவீத ஒட ஒதுக்கீட்டுக்கு, 12,059 இடங்களும் ஒதுக்கப்பட்டன.  


கலந்தாய்வு கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், செப்டம்பர் 3ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 90,201 இடங்கள் நிரப்பப்பட்டன. இன்னும் 70,579 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இந்த நிலையில் இவற்றை நிரப்ப துணைக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. 


தரவரிசைப் பட்டியல் வெளியீடு


முதல்கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை தெரிவித்தது. அதன்படி, துணைக் கலந்தாய்வுக்கு 17,710 மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தனர். குறிப்பாக பொதுப்பிரிவில் 13,650 பேரும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 4,585 மாணவர்களும் செப்டம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். பொதுக் கலந்தாய்வில் கலந்துகொள்ளாத மாணவர்களும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல்  இணையதளம்‌ வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும்‌பொழுதே அசல்‌ சான்றிதழ்களைப் பதிவேற்றம்‌ (upload) செய்ய வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டது. 


இதற்கிடையே விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. அதில் பொதுப் பிரிவில் வேதலட்சுமி என்னும் மாணவி, 200-க்கு 199.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று  முதலிடம் பெற்றார். 199 மதிப்பெண்களுடன் ராம் பிரசாத், 198.5 மதிப்பெண்களுடன் துருவன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுப் பிரிவில் பிரியதர்ஷினி என்னும் மாணவி, 188.5 கட் ஆஃப் மதிப்பெண்களுடன் தரவரிசையில் முதல் இடம் பெற்றார்.


நாளை வரை துணைக் கலந்தாய்வு


பொதுப் பிரிவில் 13,244 பேரும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 4,466 பேரும் தகுதி பெற்ற நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு நேற்று (செப்டம்பர் 6) தொடங்கி, நாளை (8ஆம் தேதி வரை) நடைபெற உள்ளது. 


விண்ணப்பித்த மாணவர்கள் இன்று (செப். 7) மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்து, பதிவு செய்யலாம் என்று பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.


தொடர்ந்து செப். 8ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்கள் அன்று மாலை 5 மணிக்குள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதை அடுத்து, கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுகுறித்த பட்டியல் செப்டம்பர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.


எஸ்சிஏ டூ எஸ்சி கலந்தாய்வு


தொடர்ந்து எஸ்சிஏ காலி இடங்களுக்கான கலந்தாய்வு செப்.10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 


கூடுதல் விவரங்களுக்கு: https://suppl.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.