தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ குரூப் 4-க்கான போட்டித் தேர்வு சார்ந்த இணையதள பயிற்சி வகுப்புகள்‌ விரைவில் தொடங்க உள்ளன. இதில் சேர்வது எப்படி என்று பார்க்கலாம்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தவுள்ள குரூப் 4-க்கான தகுதித்‌ தேர்வுகள்‌ விரைவில்‌ அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்வுகளில்‌ அதிக அளவில்‌ ஊரகப் பகுதி மாணவர்கள்‌ மற்றும்‌ பயிற்சி வகுப்புகளில்‌ சேர்ந்து பயிற்சி பெற வசதி வாய்ப்பற்ற மாணவர்கள்‌ கலந்துகொண்டு தேர்ச்சி பெறும்‌ வகையில்‌ அண்ணா நிர்வாகப் பணியாளர்‌ கல்லூரியில்‌ இணையத்‌ தள பயிற்சி வகுப்புகள்‌ நடத்த உத்தேசிக்கப்பட்டு, சீரிய முறையிலும்‌, தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக்‌ கொண்டும்‌ இணைய வழிப்பயிற்சி வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.


இலவசமாகக் கற்கலாம்


தகுதி வாய்ந்த அனைவரும்‌, தங்களிடமுள்ள ஸ்மார்ட் போன் வாயிலாக இந்த இணைய வழி வகுப்புகள்‌ மூலம்‌ இலவசமாக பாடங்களைக்‌ கற்று தகுதித் தேர்வில்‌ கலந்து கொள்ளலாம்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ குரூப் ॥ மற்றும்‌ ॥ ஏ மற்றும்‌ குரூப் 1 பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்‌ அண்ணா நிர்வாகப் பணியாளர்‌ கல்லூரியின்‌ இணைய வழி வகுப்புகளாக நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி அதிகளவிலான கிராமப்புற மற்றும்‌ எளிய மாணவர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌.


தினந்தோறும் பயிற்சி வகுப்புகள்


இதற்கிடையே இந்த குரூப் 4-க்கான பயிற்சி வகுப்புகள்‌ தொடங்கப்பட்டு AIM TN என்னும் வலைதள பக்கத்தில்‌ ஒளிபரப்பப்பட உள்ளது. சிறந்த பாட வல்லுனர்களைக்கொண்டும்‌, பாடத்‌ திட்டங்களை தொகுதி வாரியாக வடிவமைத்தும்‌, நெறிப்படுத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புகள்‌ தினந்தோறும்‌ நடத்தப்படும்‌.


நேரலை மூலம்‌ விவாதம்


ஒவ்வொரு சனிக்கிழமையன்றும்‌ மாதிரி வினாத்தாள்‌ வெளியிடப்பட்டு மாதிரித் தேர்வு நடத்தி அதனை மதிப்பீடு செய்து முடிவுகள்‌ வெளியிடப்படும்‌. மேலும்‌ ஞாயிற்றுக் கிழமைகளில்‌ நேரலை மூலம்‌ வினாத்தாள்‌ குறித்த விவாதம்‌ நடைபெறும்‌. இதன்மூலம்‌ மாணாக்கர்கள்‌ தவறுகளை களையவும்‌ அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளவும்‌ இயலும்‌.


தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ குரூப் 4 தேர்வினை முனைப்புடன்‌ எதிர்கொண்டு வெற்றி பெறும்‌ வகையில்‌ AIM TN யூடியூப் சேனல் பக்கத்தை மாணவர்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ என்று அண்ணா நிர்வாக பணியாளர்‌ கல்லூரியின்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ இயக்குநர்‌‌ தெரிவித்துள்ளார்‌.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.youtube.com/@aimtn என்ற யூடியூப் பக்கத்துக்குச் சென்று, அதில் குறிப்பிட்டுள்ள வீடியோக்களைக் காணலாம். 


இதையும் வாசிக்கலாம்: கல்வித்துறைக்கும் ஆளுநருக்கும் என்ன பிரச்சினை? திருப்பி அனுப்பிய மசோதாக்கள் சொல்லும் ரகசியம் என்ன?