சாண்டி மாஸ்டர்


தமிழ் சினிமாவின் பிரபல கொரியோகிராஃபர்களுள் ஒருவராக வலம் வருபவர் சாண்டி. சென்னையை பூர்விகமாகக் கொண்ட சாண்டி மாஸ்டரின் உண்மையான பெயர் சந்தோஷ் குமார்.  கலைஞர் டிவி நடன நிகழ்ச்சிகளில் கொரியோகிராஃபராக அறிமுகமாகி பின் படிப்படியாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து வளர்ந்த சாண்டி, ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் இணைந்து பணியாற்றிய  காலா படத்தில் பணிபுரிந்து கவனம் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் நடனம் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களின் ஓட்டுக்களையும் பெற்று பிரபலமானார். 


பல்வேறு படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய சாண்டி, விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார். சைக்கோ கதாபாத்திரத்தில்  அவரின் நடிப்பு அனைவரையும் வாய் பிளக்க வைத்தது. அதிலும், குறிப்பாக 'சாக்லேட் காபி...சாக்லேட் காபி...’ என்ற வசனத்தை கூறி சமீபத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சாண்டி.  


நடன இயக்குனராக இருந்த அவர், இந்த கதாபாத்திரத்தில் நடித்ததால், லியோ படத்திற்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. எந்த அளவுக்கு என்றால், லியோ படத்திற்கு பிறகு ஒரேடியாக கன்னட சினிமாவுக்கே சென்றுவிட்டார்.  


கன்னட சினிமாவில் மாஸ் காட்டப்போகும் சாண்டி


அதாவது, கன்னட இயக்குநர் ஷூன்யா இயக்கும் புதிய படம் ரோசி. நடிகர் யோகேஷ் நடிக்கும் இப்படத்திற்கு குருகிரண் இசையமைக்கிறார். இப்படத்தில், ஆண்டாள் கதாபாத்திரத்தில் நடிகர் சாண்டி நடிக்கிறார். சாண்டி மாஸ்டர் நடிக்கும் ரோசி என்கிற படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.  ஆண்டாள் கதபாத்திரத்தில் நடிக்கும் சாண்டியின் தோற்றத்துடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  பெண் தோற்றத்தில் டெரரான லுக்கில் சிவப்பு நிறத்தில்  காட்சி அளிக்கிறார் சாண்டி.   இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "ஒரு நடிகராக உங்களின் இந்த புதிய பாதை மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.






கன்னட திரைப்படத்தில் புதிய கெட்டப்பில் சாண்டி நடிப்பது  அவரது கேரியரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.