டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 2 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் சென்னையில் செப்டம்பர் 2ஆம் தேதி அன்று தொடங்க உள்ளன.


இது குறித்து டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 


''தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ள  குரூப் 1 மற்றும் குரூப் 2-ன்  போட்டித் தேர்வுகளுக்கு எங்கள் மையம் சார்பில் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் பயிற்சி அளிக்க உள்ளோம். பொதுத் துறையில் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்களை சார்ந்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து இலவச வகுப்புகளை நடத்தி வருகிறோம். இங்கு படித்த 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணியில் உள்ளனர்.


கலந்துரையாடல் வகுப்புகள்


தமிழக முதல்வர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க இந்த  ஆண்டே 50,000 வேலை பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். அறிவிப்பினைத் தொடர்ந்து, விரைவில் வெளியிடவுள்ள குரூப் 1 ,2   பணியிடங்களுக்கு மாதிரி தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் வகுப்பு உடனடியாக தொடங்க உள்ளது.  தொடர்ந்து அதிகப்படியான வெற்றியாளர்களை உருவாக்கி வரும் கலந்துரையாடல் வகுப்பு, மாணவர்களின் திறமையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எல்லா தகவல்களையும் குழு விவாதத்திலேயே கிடைக்கவும் வழி செய்கிறது.  அவ்வப்போது துறைசார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளும் மாணவர்களிடையே பகிரப்படுகின்றன.


கலந்து கொள்வது எப்படி?


வார இறுதி நாட்களில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்து பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம். சென்னை பாரிமுனையில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள  டாக்டர் அம்பேத்கர் கல்வி மையத்தில் 02.09.2023 அன்று முதல் வகுப்புகள் தொடங்கும். 


ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்பு நடைபெறும். மேலும் இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வதுடன், மார்பளவு புகைப்படத்துடன் குடியிருப்பு முகவரிக்கான ஆதார நகலையும் கொண்டு வர வேண்டும். 


கூடுதல் விவரங்களை 90950 06640, 63698 74318, 97906 10961, 94446 41712 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் பெறலாம்''.


இவ்வாறு டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார். 


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், போட்டித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


இதையும் வாசிக்கலாம்: Quarterly Exam: 6 முதல் 12ஆம் வகுப்பு வரை.. காலாண்டுத் தேர்வில் அதிரடி மாற்றம்- விவரம் இதோ!