தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வில் வினாத் தாள்கள் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


பள்ளிகளில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்ய, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு எனப்படும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.  இவற்றுக்கு இடையில் பருவத் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இவை தவிர்த்து உயர் வகுப்புகளுக்கு யூனிட் டெஸ்ட் எனப்படும் அலகுத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. 


இந்த நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கு அந்தந்தப் பள்ளிகள் அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ வினாத் தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. அவை அனைத்தும் ஆசிரியர்களால், குறிப்பாக டயட் என்று அழைக்கப்படும் மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்யும் ஆசிரியர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு வந்தன.


எழுந்த குற்றச்சாட்டுகள்


இதற்கிடையே மாணவர்களின் கற்றல் திறன் மோசமாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்தது.  மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட வினாத் தாள்கள், கற்றல் நோக்கங்களை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை அடுத்து எஸ்சிஇஆர்டி எனப்படும் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. 


இதை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வில் வினாத் தாள்கள் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் பொது வினாத்தாள் முறை கொண்டு வரப்பட உள்ளது. 


எப்படி மாற்றம் இருக்கும்?


பொது வினாத்தாள்கள் அனைத்தும் மாநில அளவில் தயார் செய்யப்படும். மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் இந்த வினாத் தாள்களைத் தயார் செய்யும். அவை அனைத்தும் எஸ்சிஇஆர்டி எனப்படும் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து 38 மாவட்டங்களுக்கும் தனித் தனியாக வினாத் தாள்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். இந்த முறை மூலம், மாணவர்களின் கற்றல் திறனை ஒரே சீராக மதிப்பிட முடியும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள காலாண்டுத் தேர்விலேயே இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


காலாண்டுத் தேர்வு எப்போது?


2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 4 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடங்கி, செப். 27 வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. செப். 28ஆம் தேதி காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல 1 முதல்  3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப். 23ஆம் தேதி தேர்வு விடுமுறை தொடங்க உள்ளது. தேர்வு முடிந்து அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


இதையும் வாசிக்கலாம்: Exam Time Table: காலாண்டுத் தேர்வு தேதிகள், விடுமுறை எப்போது? பள்ளி நாட்காட்டி இதோ!