ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழித்தேர்வானது இன்று (பிப்ரவரி 3 ஆம் தேதி) பலத்த முன்னேற்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 188 இடங்களில் கணினி வசதியுடன் கூடிய மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. 


ஆசிரியர் தகுதித் தேர்வு


அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


1 ஆம் தாள் தேர்வு


இதற்கிடையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் ‌1-க்கு 2,30,878 பேரும்‌ மற்றும்‌ தாள் 2-க்கு 4,01,886 பேரும்‌ என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்‌.


அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். 




தேர்வு தேதி அறிவிப்பு


இதற்கிடையே ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வானது பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என  கால அட்டவணை அண்மையில் வெளியானது. முதல்கட்டத் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி வரையிலும் 2-ம் கட்டத் தேர்வு பிப்ரவரி 10 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 


தேர்வு தொடங்கியது


இதைத் தொடர்ந்து 2ஆம் கட்டத் தேர்வு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று (பிப்ரவரி 3 ஆம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 188 இடங்களில் கணினி வசதியுடன் கூடிய மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. சேலத்தில் அதிகபட்சமாக 14 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


திருச்சி, கன்னியாகுமரியில் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத 4,01,856 பேர் தகுதி பெற்றனர். தேர்வு நடைபெறுவதை, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து நேரடியாக சிசிடிவி காட்சிகள் மூலம் இணை இயக்குநர்கள் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


இதையும் வாசிக்கலாம்: Bihar Student Fainted: 50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வெழுதச் சென்ற பிளஸ் 2 மாணவர்; மருத்துவமனையில் அனுமதி- என்ன காரணம்? https://tamil.abplive.com/news/india/bihar-news-male-student-faints-after-finding-himself-among-50-girls-in-exam-centre-check-more-details-99524/amp