12 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு
மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தொடர்ந்து மார்ச் 23 -ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13-ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு, மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன.
தேர்வு முடிவுகள்
12 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், மே 6 -ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகின. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் மாணவர்கள் 4 ஆயிரத்து 289 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 355 பேரும் என மொத்தம் 9 ஆயிரத்து 644 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 872 மாணவர்களும், 5 ஆயிரத்து 37 மாணவிகளும் என 8 ஆயிரத்து 909 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 90.28 சதவீதமும், மாணவிகள் 94.06 சதவீதம் என வழக்கம்போல் பெண் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் 29வது இடத்தை பெற்றுள்ளது.
மாவட்ட அளவில் முதலிடம்
மயிலாடுதுறை மாவட்ட அளவில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெணை மயிலாடுதுறை ஆசாத் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் சாய் கண்ணம்மை என்ற மாணவி 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ் -99, ஆங்கிலம் 98, பொருளாதாரம் 100, வணிகவியல் 100, கணக்கு பதிவியியல் 98, கணினி பயன்பாடுகள் 100 மதிப்பெண்களும் மூன்று பாடங்களில் 100 -க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார். மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஆடிட்டர் ஆவதே தனது லட்சியம் என்று மாணவி தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரழுந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப்பள்ளி, தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதானம் அரசு ஆதிதிராவிடர் நலன் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று அரசு பள்ளிகள் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன.