சேலம் மாநகராட்சிப் பள்ளியில் பயின்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி சிவானிஸ்ரீக்கு, நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர் கல்வியோடு கூடிய வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


நான் முதல்வன் திட்டத்தினால் பெரும் பலன் அடைந்து இருப்பதாகவும், இதற்காக தமிழ்நாடு அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மாணவி சிவானி ஸ்ரீ கூறியுள்ளார்.


மாநிலம் முழுவதும் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 91.97 சதவிகித மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


 உயர்கல்வி பயிலத் தேர்ச்சி


இந்த நிலையில் சிவானி ஸ்ரீ என்ற மாணவி, சேலம் குகை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வு எழுதி, 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக, தமிழ்நாடு முதலமைச்சரின் ’நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயர் கல்வி வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்று HCL நிறுவனத்திற்கு தேர்வாகி உள்ளார். மேலும் இந்த நிறுவனத்தின் மூலமாக இண்டர்ன்ஷிப் பெறுவதோடு, உயர்கல்வியும் பயில தேர்வாகி உள்ளார்.


இதனை அறிந்த சக மாணவிகள் சிவானி ஸ்ரீ மாணவிக்கு இனிப்புகளை ஊட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இதுகுறித்துப் பேசிய அவர், ’’நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்று மிக பெரிய நிறுவனத்திற்கு தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தியமைக்கு தமிழ்நாடு அரசுக்கு  நன்றி.


அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கிறது


வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ள க்யூட் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். இதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று கொண்டு உள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்று மாணவி சிவானி ஸ்ரீ தெரிவித்தார்.


சேலம் மாவட்டத்தில் 94.60 சதவிகித மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.