தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள்  உயர் கல்வி பயிலுவதற்கு வழிகாட்டும்  “உயர்வுக்குப் படி” ஆலோசனை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் நடைபெற்றது.




இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, அரசுப்பள்ளிகளில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதை 100 சதவீதம் உறுதிசெய்யும் பொருட்டு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2022-23, 2023-24 கல்வி ஆண்டுகளில் 12-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற/ தேர்ச்சி பெறாத / தேர்விற்கு வருகை தராத / இடைநின்ற மாணவர்களில் உயர்கல்வி எதிலும் சேர்க்கை செய்யப்படாத மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘உயர்வுக்குப் படி’ நிகழ்ச்சி நடைபெறுகின்றது.


மேலும், உயர் கல்வி அல்லது திறன் மேம்பாட்டிற்காக மாணவர்களுக்கு தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும், எதிர்கால கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து மாவட்ட, கோட்ட அளவில் ‘உயர்வுக்குப் படி’ நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.




இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் 12ம் வகுப்புபயின்று, உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் மற்றும் கடந்த மூன்றாண்டுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மற்றும் சேர்ந்துவிட்டு இடைநின்ற மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை 100 சதவீதம் உறுதி செய்யும் வகையில், முதல் கட்டமாக பெரியகுளம் கோட்ட அளவில் 11.09.2024 மற்றும் 21.09.2024 ஆகிய தேதிகளிலும், உத்தமபாளையம் கோட்ட அளவில் 19.09.2024 மற்றும் 25.09.2024 ஆகிய தேதிகளிலும், “உயர்வுக்குப் படி” நிகழ்ச்சி மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கி அரங்கம் அமைக்கும் கல்லுாரி/பாலிடெக்னிக்/ஐடிஐ மூலம் நேரடிச் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உயர் கல்வி சேர்க்கைக்குத் தேவையான சான்றிதழ்கள் (இருப்பிடச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ்) ஆகியன உடனடியாகக் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




முன்னதாக, பெரியகுளம் கோட்ட அளவிலான முதல் கட்டநிகழ்ச்சி, 11.09.2024 அன்று பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரியிலும் அதனைத்தொடர்ந்து, உத்தமபாளையம் கோட்ட அளவிலான முதல் கட்டநிகழ்ச்சி 19.09.2024 பாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியிலும் நடைபெற உள்ளது. எனவே, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 11, 12-ம் வகுப்புகளில் இடைநின்ற / தேர்ச்சி பெறாத/தேர்ச்சி பெற்ற, இதுவரை உயர்கல்வியில் சேர்க்கை செய்யப்படாத மாணவர்கள் அனைவரும் மேற்படி ‘உயர்வுக்குப் படி’ உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிகாட்டுதல்கள் பெற்று, உயர் கல்வி/திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்கள். 


TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


அதனைத்தொடர்ந்து, மாணவி ஒருவருக்கு என்.ஆர்.டி.பாராமெடிக்கல் கல்லூரியில் படிப்பதற்கான ஆணையினையும், மேலும்,  4  மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிப்பதற்கும், ஒரு மாணவர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்கள். நடைபெற்ற நிகழ்ச்சியில் 184 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அதில் 95 மாணவர்கள் கல்வி பயில்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.