தொடர் விடுமுறை நாட்களில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சுபமுகூர்த்த நாட்கள், மிலாடி நபி ஆகியவற்றை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் வருகிறது. இதையடுத்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.



நாளை முதல் சிறப்பு பேருந்துகள்:


இதன்படி, வெளியூர் பேருந்துகள் செல்லும் கிளாம்பாக்கத்தில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு நாளை ( செப்டம்பர் 13) மற்றும் நாளை மறுநாள் ( செப்டம்பர் 14ம் தேதி) 955 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.


கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கும் நாளை (செப்டம்பர் 13ம் தேதி) மற்றும் செப்டம்பர் 14ம் தேதி( நாளை மறுநாள்) 190 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

முகூர்த்த நாள் முதல் மிலாடி நபி வரை:


மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல, பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


அதேபோல, சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் இருந்து வெளியூர் சென்ற பயணிகள் மீண்டும் சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் திரும்ப ஏதுவாக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 17ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


மிலாடி நபி முதலில் 16ம் தேதி கொண்டாடப்படும் என்ற நிலையில், பிறை காரணமாக மிலாடி நபி வரும் 17ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால், வரும் சனிக்கிழமை முதல் வரும் செவ்வாய் வரை விடுமுறை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்கள் மற்றும் தனியார் பேருந்துகளிலும் அதிகளவு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த வாரம் தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அப்போது கடந்த 4ம் தேதி மட்டும் அரசுப் பேருந்துகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வதற்காக 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.