இனிப்பு வகை உணவுகள் யாருக்குத்தான் பிடிக்காது. கேக், பாயசம், லட்டு, இனிப்பு வகைகள் என ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? சிலர் ஸ்வீட் டூத். இனிப்பு பிரியர்கள் வாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது இனிப்பு சாப்பிட்டுவிட வேண்டும் என்றிருப்பார்கள். ஆனால், அதிகளவு இனிப்பு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இனிப்பு பிரியராக இருப்பவர்களாக இருந்தாலும் உடல்நலனை கருத்தில்கொண்டு அதை கட்டுப்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிடுவதை கட்டுப்படுத்த ஆயுர்வேதம் மருத்துவம் பரிந்துரைகள் பற்றி காணலாம்.
உணவை நன்றாக சுவைத்து சாப்பிடுவது ரொம்பவே முக்கியம். வாயில் சுரக்கும் ‘Amylase' என்ற உமிழ்நீர் உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போ-ஹைட்ரேட்டை சிறிய துண்டுகளாக மாற்றிவிடும்.
உணவை நன்றாக மென்று திண்பது செரிமானத்திற்கு உதவுவதுடன், அது இனிப்பு சுவையாக மாறிவிடும். நன்றாக மென்றுவிட்டால் செரிமான மண்டலத்தின் வேலை என்பது எளிதானதாகிவிடும்.
அதோடு, உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படும். இதனால் நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாது. சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.
நிதானமாக என்ன சாப்பிடுகிறோம் என்பதை கவனித்து சாப்பிட்டால், சுவை தெரியும். அப்போது உங்களுக்கு உணவு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இது அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தாது.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கும்.
நோக்கம் முக்கியம்:
’இனி சர்க்கரையே சாப்பிட கூடாது.’ என்ற இலக்கை நிர்ணயிக்காமல் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யலாம். ஏனெனில், சர்க்கரை சாப்பிடுவதை விட முடியவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விடுபடலாம். இனிப்பு சாப்பிடுவதிலும் உங்களால் முயன்ற அளவிற்கான இலக்கை நிர்ணயிக்கலாம். இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் கொஞ்சமாக சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.
வீட்டில் செய்த இனிப்புக்கு முன்னுரிமை:
ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் எனில் அதற்கு முதலில் அவசியமானது ஆரோக்கியமான சமையல் முறை. வீட்டில் செய்யும் இனிப்புகளை சாப்பிடலாம். மைதா, வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவற்றை தவிர்த்துவிடலாம். சிறுதானிய வகைகள் கொண்டு இனிப்புகளை செய்யலாம்.
ஊட்டச்சத்து முக்கியம்:
பண்டிகை காலம் என்றாலும் ஊட்டச்சத்து மிகுந்த இனிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லது. காய்கறி, இறைச்சி என சத்தான உணவுகளையும் உடற்பயிற்சியும் உடல்நலனை ஆரோக்கியத்துடன் பாதுகாக்க உதவும். சர்க்கரை பயன்படுத்தி இனிப்பு வகைகள் செய்வதை தவிர்க்கலாம்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏபிபி நாடு ஏற்காது.