தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படும் என்று விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் முதலிடங்களைப் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு இணங்க தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் 11.10.2023 அன்று பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட உள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இந்தப் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு தன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் யிலாகவும் அனுப்பப்படும்.
தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி தலைப்புகள்:
பள்ளி மாணவர்களுக்கு
1. வெண்தாடி வேந்தர்,
2. வைக்கம் வீரர்,
3. பகுத்தறிவு பகலவன்,
4. பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தங்கள்,
கல்லூரி மாணவர்களுக்கு
1. பெரியாரும் பெண் விடுதலையும்,
2. சுய மரியாதை இயக்கம்,
3. தெற்காசியாவின் சாக்ரடீஸ்
4. தன்மானப் பேரொளி,
5. தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
ஆகிய தலைப்புகளில் பெரியார் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.
பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம் ஆகும். அதேபோல இரண்டாம் பரிசு ரூ.3000/, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளது.
அதேபோல மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத் திறனை சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000/- என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளது. இந்தத் தகவலை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: MoE Guidelines: மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம், தற்கொலைகள்... தடுப்பது எப்படி? - மத்திய அரசு வழிகாட்டல்!