தற்கொலை உள்ளிட்ட தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவி, ஆதரவு வழங்கும் வகையில், மத்தியக் கல்வி அமைச்சகம் வழிகாட்டு வரைவறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பள்ளிகளில், பள்ளி நலக் குழு உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 


நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. குறிப்பாக நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரங்களிலும் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் காலங்களிலும் மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அதேபோல நீட், ஜேஇஇ ஆகிய மருத்துவ, பொறியியல் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் பயிற்சி மையங்களில் சேர்ந்து தயாராகும் மாணவர்கள், கோட்டாவில் படிக்கும்போது மன அழுத்தத்துக்கு ஆளாகி, உயிரை விடுகின்றனர். 


இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை உள்ளிட்ட தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவி வழங்கும் வகையில், மத்தியக் கல்வி அமைச்சகம் உம்மீத் என்ற பெயரில் (UMMEED - Understand, Motivate, Manage, Empathize, Empower, and Develop) வழிகாட்டு வரைவறிக்கையை வெளியிட்டுள்ளது.


பள்ளி நலக் குழு


அதாவது மாணவர்களுக்கு புரியவைத்தல், உற்சாகப்படுத்துதல், சமாளித்தல், அதிகாரமளித்தல், வளர்ச்சிக்கு உதவுதல் ஆகிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வரைவில் பள்ளிகளில், பள்ளி நலக் குழு (School Wellness Team - SWT) உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:


’’பள்ளிகளில் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் தலைமையில் பள்ளி நலக் குழு உருவாக்கப்பட வேண்டும். இதில், அபாயகரமான அறிகுறிகளோடு இருக்கும் மாணவர்கள் அல்லது தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் அபாயம் உள்ள மாணவர்களுக்கு போதிய ஆதரவு வழங்கப்பட வேண்டும். 


ஒவ்வொரு குழந்தையும் முக்கியமானவர்கள்தான் (Every Child Matters). அதனால் பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின் இடையே வலிமையான கூட்டுறவை உருவாக்க வேண்டும். இதன்மூலம் தற்கொலைகளைத் தடுப்பதற்கும், தற்கொலை சிந்தனையுடன் தொடர்புடைய தவறான புரிதல்களைக் குறைப்பதற்குமான சமூக ஆதரவை உருவாக்க முடியும்.




வகுப்பறைகளில் என்ன செய்யலாம்?


அதேபோல காலியாக உள்ள வகுப்பறைகளைப் பூட்டி வைக்கலாம். இருட்டாக உள்ள வளாகப் பகுதிகளை ஒளிரச் செய்யலாம். தோட்டப் பகுதிகளை பசுமையாகப் பராமரித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். 


ஆசிரியர்களின் பங்கு


பிற மாணவர்களுடன் ஒருவரை ஒப்பிட்டுப் பேசுவது, தோல்வியை நிரந்தரமாகப் பார்ப்பது, படிப்புத் திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வெற்றியை அளவிடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். 


மன நலம் மற்றும் தற்கொலை தடுப்பு சார்ந்த விழிப்புணர்வை பள்ளிகளில் நடத்தப்படும் செயல்பாடுகள் மற்றும் போட்டிகளின் மூலம் உறுதிசெய்ய வேண்டும். இதில், பள்ளி நலக் குழு முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். எனினும் தற்கொலைகளைத் தடுப்பதில், பள்ளி நலக்குழு மட்டும் தனித்து முயற்சிகளைச் செய்ய முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத்தினர் என அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும் இதற்கு அவசியம். 


அதேபோல பள்ளியின் உள்ள வளங்களைப் பொறுத்து, பள்ளி நலக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதைச் செய்யவேண்டும். இதன்மூலம் அனைத்துத் தரப்பினரும் பள்ளி நலக் குழுவில் இடம்பெறுவதை உறுதி ட்ர்ய்ய வேண்டும். குழுவின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டியதும் முக்கியம்’’. 


இவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வரைவில் கூறப்பட்டுள்ளன. 


மத்தியக் கல்வி அமைச்சக வரைவை முழுமையாகக் காண: https://dsel.education.gov.in/sites/default/files/infocus/Draft_UMMEED_Guielines.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.