அன்புமணி ராமதாஸ்க்கு  நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் சிகரெட்டுடன் இருந்த காட்சிக்கு பாமக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 


இன்று முதல் நாளை மறுநாள் வரை நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். காவிரி விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மேலும், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கையை அன்புமணி ராமதாஸ் முன்வைத்தார். 


நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய காலத்தில் இருந்து அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சுகள் அடிப்பட்டது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த விஜய் மக்கள் இயக்கம் அதன் பின்னர் தேர்தல் களம் பக்கம் பெரிதாக தலை சாய்க்கவில்லை. 


இந்நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் அடிக்கடி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினரை நேரில் அழைத்து பாராட்டுவது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளைச் சேர்ந்த டாப் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அவர்களின் பெற்றோருடன் அழைத்து, அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியது என கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் அரசியல் முழுநேரமாக களமிறங்குவதற்கு தயார் ஆகி வருகிறார் என பார்க்கப்படுகிறது. 


இவ்வளவு காலம் இல்லாமல், சமீபமாக, பெரியார் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது போன்ற செயல்களை விஜய் கட்டளையிட்டால் அதனை செய்து முடிக்கும் அவரது ரசிகர்களை கிட்டத்தட்ட தொண்டர்களாகவே மற்றிவிட்டார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு அரசியல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகள் ஊடகங்களில் எவ்வளவோ வெளியானாலும், அதற்கு விஜய் தரப்பில் மறுப்பு தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேவேளையில் இன்று அதாவது அக்டோபர் 9ஆம் தேதி, செய்தித்தாள் ஒன்றில் விஜய் மக்கள் இயக்கம் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கவுள்ளது போன்றதொரு செய்தி வெளியானது. ஆனால் இதற்கு விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கபப்ட்டுள்ளது. இருப்பினும் நடிகர் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.