தஞ்சாவூர்: தரைக்கு வெளியே இருக்கும் மரம் மட்டுமே வெளியில் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனுடைய வேர் ஆழமாக பதிந்திருப்பது வெளியில் தெரியாது. உங்களுடைய முயற்சி மரத்தின் வேர் போல் ஆழமாய் இருந்தால்தான் உங்களால் வெற்றி பெற முடியும் என்று கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் அறிவுரை வழங்கினார்.


தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு  கல்லூரியில் 63வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரோஸி தலைமை வகித்தார். இதில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.


வேர் வெளியில் தெரிவதில்லை


பின்பு தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் பேசியதாவது:  முறையான கல்வி மூலம் பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களே உங்களுடைய எதிர்காலத்தை திட்டமிடுங்கள். தரைக்கு வெளியே இருக்கும் மரம் மட்டுமே வெளியில் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனுடைய வேர் ஆழமாக பதிந்திருப்பது வெளியில் தெரியாது. உங்களுடைய முயற்சி மரத்தின் வேர் போல் ஆழமாய் இருந்தால்தான் உங்களால் வெற்றி பெற முடியும். மனிதன் இயற்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 




ஏற்ற இறக்கங்களை பற்றி கவலை வேண்டாம்


நதி பிரம்மாண்டமாய் பிறப்பது இல்லை, அதேபோல் மனிதர்கள் யாரும் ஞானியாய் பிறப்பதில்லை. நதி பிறக்கும் இடத்தில் ஒரு சிறு ஓடையை போல் தான் பிறக்கும், ஆனால் நதியானது செல்ல செல்ல  நீர் பெருக்கெடுத்து ஓடும். நதியானது மேலிருந்து கீழே இறங்கும், பள்ளம் மேடு என்று எதையும் பார்க்காமல் எல்லா இடங்களையும் கடந்து செல்லும். வயல்வெளிகளை வளம் செய்யும் அதேபோல் நாமும் ஏற்ற இறக்கங்களை பற்றி கவலை கொள்ளாமல் மானுட சமூகத்திற்கு நாம் வளம் சேர்க்க வேண்டும். நதியானது தான் மட்டும் வாழாது பிறருக்கும் உதவுகிறது. அதைப்போல நாமும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் வாழ வேண்டும்.


மலையே தடுத்தாலும் நதி நிற்காது


சுயநலமாக இருப்பது ஓர் சாபக்கேடு பிறருக்கு உதவினால் உங்களுக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும். மலையே தடுத்தாலும் நதியானது தயங்கி நிற்பது இல்லை. அதைத் தாண்டி முன்னேறி செல்லும். நதியானது பின்னோக்கி செல்லாது. எப்பொழுதும் முன்னோக்கியே செல்லும். அதைப்போலவே மனிதனும் முன்னோக்கியே செல்ல வேண்டும். எல்லா நதிகளுக்கும் ஓர் எல்லை உண்டு. நதியானது கடலில் சங்கமிப்பதனால் அந்த நதி இல்லாமல் போய்விடாது. தன்னுடைய அடையாளம் தெரியாமல் போவதற்காக நதியானது கலங்குவது இல்லை. துன்பப்படாமல் மனிதன் இறந்து போக வேண்டும் என்று புத்தர் கூறினார்.


ஒரு நொடிதான் மனிதனுடைய ஆயுள் என்று. எனவே இப்பொழுது இருப்பது தான் நம்மளுடைய ஆயுள். இந்த ஆயுளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பட்டங்களை பெற்றுள்ள மாணவர்கள் இந்த உலகத்திற்கு திசை காட்டுகின்றவர்களாக மாற வேண்டும். போட்டி தேர்வுகள், மேற்படிப்புகள், ஆராய்ச்சித் துறைகளில் தங்களை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்காக வளமான உலகம் காத்து நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.