ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மகளிர் பிரீமியர் லீக் 2024 சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி அசத்தியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 113 ரன்களுக்குள் சுருண்டது. இலக்கை துரத்திய பெங்களூரு அணி கடைசி ஓவரில் இலக்கை துரத்தி வெற்றியை சுவைத்தது. 


இந்தநிலையில், சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எவ்வளவு பரிசுத் தொகையை பெற்றது..? இரண்டாம் இடத்தை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எவ்வளவு கோடி கிடைத்தது என்ற மதிப்பை இங்கே பார்க்கலாம். 


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ. 6 கோடியும், ரன்னர் அப் ஆன அணிக்கு அதாவது தோல்வியடைந்த அணிக்கு ரூ. 3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கியது. இதையடுத்து, இந்த இரண்டாவது சீசனிலும் இந்த பரிசுத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. 


அப்படிப்பட்ட நிலையில் மகளிர் பிரீமியர் லீக் 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ. 6 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ. 3 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ. 6 கோடி வழங்கப்பட்டது. முதல் சீசனைப் போலவே டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது முறையாகவும் இரண்டாம் இடத்தை பிடித்தது. இரண்டு சீசன்களிலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை இறுதிப்போட்டி வரை வந்து பறிகொடுத்தது. 


16 ஆண்டுகள் காத்திருப்பு:


கடந்த 16 வருடங்களாக (16 சீசன்கள்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆண்கள் அணியால் இன்று வரை சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக எண்ட்ரி கொடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும், இரண்டாவது முறையாக இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இதையடுத்து, ஒவ்வொரு சீசனிலும், ஆண்கள் அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் இப்போது வரை அது நடக்கவில்லை. அதே நேரத்தில், பெண்கள் அணி இரண்டாவது சீசனில் பட்டத்தை வென்று அசத்தியது. 


போட்டி சுருக்கம்: 


டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் மெக் லானிங் பேட்டிங் தேர்வு செய்து ஷபாலி வர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு தொடக்கம் கொடுத்ததால் 7 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஏழாவது ஓவரில் ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஆலிஸ் கேப்சி ஆகியோரை அடுத்தடுத்த 4 பந்துகளில் சோஃபி மௌலினோ வெளியேற்றினார். அங்கு அணியின் ஸ்கோர் 0 விக்கெட்டுக்கு 64 ரன்களில் இருந்து 3 விக்கெட்டுக்கு 64 ரன்களாக உயர்ந்தது. இந்த பின்னடைவுகளில் இருந்து மீள முடியாமல் திணறிய டெல்லி அணி, மீதியை ஸ்ரேயங்கா பாட்டீல் 3.3 ஓவரில் 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முடித்தார். லானிங் மற்றும் ஷஃபாலியைத் தவிர, டெல்லி அணிக்காக எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக செயல்பட முடியவில்லை.


இறுதியாக கிடைத்த சாம்பியன் பட்டம்: 


114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, முதல் விக்கெட்டுக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் சோஃபி டிவைன் இடையே 49 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் இருந்தது. டெவின் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்களுடன் 32 ரன்களுடனும், கேப்டன் மந்தனா 39 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து மிக முக்கியமான இன்னிங்ஸை ஆடினர். தொடர்ந்து, எலிஸ் பெர்ரி 37 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும், ரிச்சா கோஷ் வின்னிங் ஷாட்டை அடித்து ஆர்சிபியை முதல்முறையாக சாம்பியனாக்கினர்.