2023ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், மாலதி உள்ளிட்ட 75 ஆசிரியர்களுக்கு  வழங்கினார். இந்த நிகழ்ச்சி இன்று (செப். 5) டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. ஒவ்வொரு விருதும் தகுதிச் சான்றிதழ், ரூ. 50,000 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை உள்ளடக்கியது ஆகும்.


மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது. அன்று சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. 


இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகள் 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர் கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் என மொத்தம் 75 பேருக்கு வழங்கப்பட்டன. குறிப்பாக மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முனைவர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர், கீழப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாலதி ஆகிய இருவருக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து தேசிய விருது வழங்கப்பட்டது. 




அதேபோல, கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியை டாக்டர் எஸ்.பிருந்தா, திண்டுக்கல், குள்ளம்பட்டி, அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய  உதவி பயிற்சி அலுவலர் எஸ்.சித்திரகுமார் ஆகியோருக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. 


இதையும் வாசிக்கலாம்: Dr Radhakrishnan Award: அடேங்கப்பா.. இத்தனை பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சர் உதயநிதி தலைமையில் வழங்கும் அன்பில்




இந்த விருதோடு தகுதிச் சான்றிதழ், ரூ. 50,000 ரொக்கப் பணம் மற்றும் வெள்ளிப் பதக்கம் ஆகியவையும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. விருது பெறுவோர் பிரதமருடன் உரையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள்.


உயர் கல்விக்கும் திறன் மேம்பாட்டுக்கும் தேசிய நல்லாசிரியர் விருது


இந்த ஆண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது, உயர் கல்வித் துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்துக்குக் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இதன்மூலம் 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர் கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் என மொத்தம் 75 பேருக்கு இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.


தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று (செப். 5ஆம் தேதி) வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கினார்.


தேசிய விருது பெறும் ஆசிரியர்களை வீடியோ வடிவில் காண https://www.youtube.com/watch?v=nPdn5EncG3c என்ற இணைப்பில் காணலாம்.


இதையும் வாசிக்கலாம்: TTSE Exam Date: வெளியான தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு அறிவிப்பு; எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?