வேலூரில் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ”திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா மற்றும் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற முப்பெரும் விழா ஆகிய இரண்டையும் இணைத்து வேலூரில் நடத்த வேண்டும் என தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் நாங்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.




 


மாநாடுகளை நடத்துவதிலும், ஊர்வலங்களை நடத்துவதிலும் என்றைக்கும் வேலூர் மாவட்டம் சலைத்து போனதும் இல்லை சலித்து போனதும் இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் பல சட்ட சிக்கல்கள் உண்டு. எனவே இதை எப்போது செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை. ஆக இது ஒரு மிஸ்ட் ஆகத்தான் உள்ளது. அதிமுக எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி செல்வதால் இந்த ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்கிறார்கள். காவிரியில் ஐந்தாயிரம் டிஎம்சி தண்ணீர் விடுவது தொடர்பாக கர்நாடகா மேல்முறையீடு போயுள்ளது, நாமும் மேல்முறையீடு செய்துள்ளோம். வருகிற 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது. பாஜக சின்ன அளவில் பெரிய அளவிலும் நடு அளவிலும் என எல்லா அளவிலும் எங்களை எதிர்க்கிறார்கள் நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை” எனக் கூறினார்.


 




 


முன்னதாக அமைச்சர் துரைமுருகன் மேடையில் பேசுகையில்,


மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அவர் ஆட்சி நடத்துகிறாரா? அல்லது அமெரிக்காவைப் போன்று பிரசிடென்ட் கவர்மென்ட்டை கொண்டு வரப் போகிறாரா? அல்லது தேர்தலை உடனடியாக கொண்டு வரப் போகிறாரா? தள்ளி வைக்கப் போகிறாரா? என எதுவும் தெரியவில்லை. ஆனால் திடீரென கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள். ஆனால் ஒன்று நன்றாக தெரிகிறது. தேர்தல் விரைவில் வர இருக்கிறது. சட்டமன்றமும் பாராளுமன்றமும் சேர்ந்து வருமா? என்பது மட்டும்தான் இப்போது கேள்விக்குறி. ஆனால் நாம் சட்டமன்றமும், நாடாளுமன்ற தேர்தலும் இணைந்து வருவதாக நினைத்தே பணியாற்ற வேண்டும். இது தொடர்பாக ஒவ்வொரு தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்தி நிலைமையை அறிந்து அதை செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளருக்கு தெரிவித்து இருக்கிறேன். எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் வருகிறதோ இல்லையோ, வழியில் செல்லும்போது உஷாராக கையில் கம்பை எடுத்துச் செல்வது போல் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும் என பேசினார்.