தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று (செப். 5ஆம் தேதி) வழங்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற உள்ள விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்குகிறார்.


முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர். ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் டெல்லியில் வழங்க உள்ளார். 


தமிழ்நாட்டில் யாருக்கு விருது?


தேசிய நல்லாசிரியர் விருது தமிழ்நாட்டில் மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முனைவர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர், கீழப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாலதி ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


386 பேருக்கு மாநில விருது


அதேபோல மாநில அரசு சார்பில் சிறப்பாகச் செயலாற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். இந்த விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழங்குவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்க உள்ளார். மொத்தம் 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று (செப். 5ஆம் தேதி) வழங்கப்படுகிறது. சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த விருது மாலை 4 மணிக்கு வழங்கப்படுகிறது. 




அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற உள்ள விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் பள்ளிக் கல்வி உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 


குற்றவியல், ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இல்லை


முன்னதாக நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று, 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 342 பேர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆவர். விருது பெறும் ஆசிரியர்கள் தங்களுடன் 2 பேரை அழைத்து வரலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.


தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.   


இதையும் வாசிக்கலாம்: Teachers Day 2023: 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு