தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் மாணவர்கள் 92.17 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். 47 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதேபோல், மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.


இந்த இரண்டு பொதுத்தேர்வு முடிவுகளும் ஒரேநாளில், வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, 10, 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டன.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரம் இன்று வெளியானது.




அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 407 பள்ளிகளைச் சேர்ந்த 30,279 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 27,905 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதம் 92.16 ஆக உள்ளது. மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 17 வது இடத்தை பிடித்துள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 407 பள்ளிகளில் 107 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். அதில் 47 அரசு பள்ளிகளும், 41 மெட்ரிக் பள்ளிகளும், 8 சுயநிலைப் பள்ளிகளும், 6 பகுதியாக உதவி பெறும் பள்ளிகலும், 3 முழுமையாக உதவி பெறும் பள்ளிகளும், தலா ஒரு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும் பள்ளி, சமூகநலத்துறை சார்பில் செயல்படும் பள்ளியும் அடங்கும்.


பத்தாம் வகுப்பில் கடந்த 2018ம் ஆண்டு 94.5 சதவீத தேர்ச்சி அடைந்து மாநில அளவில் 21 இடமும், 2019ம் ஆண்டில் 95.2 சதவீத தேர்ச்சி அடைந்து மாநில அளவில் 18ம் இடமும், 2022 ம் ஆண்டில்  90.07 சதவீத தேர்ச்சி அடைந்து, மாநில அளவில் 13 வது இடமும் 2023 ல் 92.16 சதவீத தேர்ச்சி அடைந்து மாநில அளவில் 17 வது இடத்தை தஞ்சாவூர் மாவட்டம் பிடித்துள்ளது. இதில் 2020, 2021 ல் கொரோனா காலம் என்பதால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.


கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் தேர்ச்சி பெற்று தஞ்சாவூர் மாவட்டம் மாநில அளவில் 4 இடங்கள் முன்னேறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 47 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதை அடுத்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.