அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் விதிகளை மீறவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது. பங்கு சந்தையை ஒழுங்கு செய்வதில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) தவறி இருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியாது என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை:
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்ததாக குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்து வருகிறது.
ஆனால், அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி கழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது. பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:
கடந்த மார்ச் 2ஆம் தேதி, இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்தும் அதானி குழுமம் ஏதேனும் விதி மீறலில் ஈடுபட்டதா என்பது பற்றியும் ஆராய இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) உத்தரவிட்டது. இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதேபோல, இதுபோன்ற சூழல் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் வகையில் இந்திய பங்கு சந்தையின் முதலீட்டாளர்களை பாதுகாப்பது தொடர்பாக ஆராய நிபணர் குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. கடந்த வாரம், நிபுணர் குழு தங்களின் அறிக்கையை தாக்கல் செய்தது.
தற்போது, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் விதிகளை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழு சொன்னது என்ன?
அதானி குழுமம், தங்களின் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியது போன்று தெரியவில்லை. சில்லறை முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில் அதானி குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பங்குதாரர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த உதவியது என உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விதிமீறல் நடந்தது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு, தங்கள் சந்தேகத்தை கட்டுப்பாட்டாளரால் நிரூபிக்க முடியவில்லை. அதானி குழுமத்தில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும் செபி விதிகளை பின்பற்றியுள்ளனர் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.