கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் நாயினர் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அண்ணாமலை தனது காளையை அழைத்து வந்தார். மேலும் மண்டபத்திற்கு பாஜக கட்சியினர் அழைத்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை பார்வையிட்டார். மேலும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க கண்காட்சியை அண்ணாமலை பார்வையிட்டார். பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, பாஜக நிர்வாகிகள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, ”தமிழக மக்கள் மீது பிரதமர் அதிகளவில் அன்பு வைத்துள்ளார். அவர் மக்களை மனதில் வைத்தே திட்டங்களை வழங்கி வருகிறார். ஜனநாயகத்தின் தலைவராக பிரதமர் இருக்கிறார். பிரதமராக 9 ஆண்டுகளைக் கடந்து, 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இன்னும் 5 ஆண்டு காலம் மோடி பிரதமராக இருக்க வேண்டும். தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக பணி செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து எத்தனை எம்.பி.களை பாராளுமன்றத்திற்கு அனுப்பபோகின்றோம் என்பதை திட்டமிட வேண்டும். இந்தியாவை அடிப்படையில் இருந்து மாற்றியுள்ளார் பிரதமர். இன்னொரு பாதையில் அழைத்து சென்றுள்ளார். குடிகளை பாதுகாப்பது மன்னனின் முதல் பணி. அதை தான் பிரதமர் செய்து வருகிறார். உள்நாட்டு அச்சுறுத்தல், அண்டை நாட்டு அச்சுறுத்தல் அனைத்தும் எதிர்கொண்டு வருபவர் பிரதமர். இந்திய சரித்தரத்தில் மிக அமைதியான வாழ்க்கை நாம் வாழ்ந்து வருகிறோம். மோடியின் நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் ஒரு கோடி பேர் சுற்றுலா பயணம் செய்துள்ளார். நக்சல்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளனர். பி.எப்.ஐ போன்ற பயங்கரமான இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தைரியமாக நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
கோவையில் வெடிகுண்டு கலச்சாரம், துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. எப்போது கொலை நடக்கும், கலவரம் நடக்கும் என்ற அச்சம் தமிழகத்தில் உள்ளது. மூன்றாவது பொருளாதார நாடக நாம் மாற போகிறோம். அதற்கான அடிப்படை பணியை பிரதமர் செய்து வருகிறார். 350 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாரத்தில் முன்னேறும் நாடாக நாம் உள்ளோம். இந்தியாவின் பொருளாதரம் உயர உயர தமிழ்நாட்டின் பொருளாதரம் குறைகிறது. மற்ற மாநிலங்கள் முன்னேறி வருகிறது. திராவிட அரசின் 30 சதவீத கமிஷன் தான், தமிழ்நாடு பின்னோக்கி செல்ல காரணம். மே 30 முதல் ஜீன் 30 வரைக்கும் பிரதமரின் நலத்திட்டங்களை பெரிய இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்த போது 18 ஆயிரம் கிராமத்தில் இந்தியாவில் மின்சாரம் இல்லை. ஆனால் இப்போது மின்சாரம் இல்லாத கிராமமே கிடையாது. தற்போது நம்முடைய நாடு 100% மின்சாரம் நிறைந்த நாடாக உள்ளது. நாடு முழுவதும் இலவசமாக கழிப்பிடம் கட்டி கொடுத்துள்ளோம். காமராஜர் எண்ணத்தின்படி கடைசி வீடு வரைக்கும் தண்ணீர் கொண்டு செல்வதை பிரதமர் குறிக்கோளாக வைத்து செயல்பட்டவர். 65% வீட்டுக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை செய்துள்ளோம். வெளிப்படையாக வளர்ச்சி பணியை செய்து வருகிறோம். பிரதமர் மோடி தான் புதுமை பெண்களை உருவாக்கி வருகிறார். திராவிட மாடல் அரசு மாதிரி வீர வசனம் பேசுவதில்லை. பாஜக ஆட்சிக்கு வரும்போது 63% தான் எல்.பி.ஜி சிலிண்டர் இருந்தது. ஆனால் தற்போது 99.09% உயர்த்தப்பட்டுள்ளது. சுத்தம், சுகாதாரம், வீடு அனைத்தும் பிரதமரின் ஆட்சியில் உயர்ந்துள்ளது. பாஜக ஆட்சியில் ஒவ்வொரு மனிதரும் மாறியுள்ளனர். வாழ்கையில் உயர்ந்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் அந்த உயர்வு நடைபெறவில்லை. உலக அளவில் இந்தியாவிற்கு பெருமையை பெற்று தந்தவர் பிரதமர். ஜல்லிக்கட்டுவை தடை செய்தது காங்கிரஸ். பிரதமர் மோடி தலையிட்டு குழு அமைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டனர். ஜல்லிகட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியுள்ளது. 2024 என்பது பாஜகவிற்கு பலபரீட்சை. எல்லா தீய சக்திகளும் ஒரு அணியில் திரண்டுள்ளனர். பாஜக தொண்டர்கள் வீடுவீடாக ஏறனும், மக்களை சந்திக்கனும். இன்றிலிருந்து பாராளுமன்ற தேர்தல் நமக்கு ஆரம்பித்து விட்டது. வெற்றி தோல்வியை தாண்டி உழைப்பு போடுங்கள். கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி இல்லை. தனியாக போட்டி போடுகிறோம், போட்டி போட்டும் வெற்றி பெறவில்லை போன்ற எண்ணங்களை தூக்கிப்போட்டு உழையுங்கள். 39 தொகுதியில் இருந்து 7 பேர் ஒரு தொகுதிக்காக வந்துள்ளீர்கள். எந்தவிதமான எதிர்பார்ப்பு இல்லாமல் உழையுங்கள். 7 மாத காலம் உழையுங்கள்” எனத் தெரிவித்தார்.