50 விழுக்காடு மாணவர்களுடன் தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தேசித்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 9ம்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்
ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 12:30 மணியளவில் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து தமில்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும். இம்மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மீண்டும் தடைபட்டது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல், நோய்த் தோற்றுப் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது. பிறகு, அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அனுமதி நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
ஓடிசா, சத்தீஸ்கர், மேற்கி வங்கம், கர்நாடகா, உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பள்ளிகளை திறக்க முடிவெடுத்துள்ளன. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் இயக்குனர் பேராசிரியர் ரந்தீப் குலேரியா, " இளைஞர்களை விட குழந்தைகள் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை திறமையாக கையாளுகின்றனர். இளைஞர்களை விட குழந்தைகளிடம் ஏற்பிகள் (Receptors) குறைவாக உள்ளன. எனவே, முதலில் உயர்க்கல்வி நிறுவனங்களை விட தொடக்கப் பள்ளிகளை திறப்பது சிறந்த யோசனையாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், நாம் அறிந்தவாறு கொவிட்-19 என்பது உருமாறும் தன்மையுடைய புதிய தொற்று நோய். எதிர்கால அலைகள் குழந்தைகளை பாதிக்குமா அல்லது தொற்றின் தீவிரம் அதிகரிக்குமா என்பது அனைத்தும் ஊகங்களே. பெரும்பாலான பெரியவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாலும், தற்போதைய நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி அனுமதிக்கப்படவில்லை என்பதாலும், வருங்கால அலைகள் குழந்தைகளை பாதிக்கும் என்று மக்கள் ஊகத்தின் அடிப்படையில் தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இந்த தொற்றுநோய் குழந்தைகளிடையே எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாத நிலையிலும் அதிலிருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் கொவிட் சரியான நடத்தை விதிமுறையை பின்பற்றுவதுடன், வெளியில் சென்று வரும்போது தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமூக நிகழ்வுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் பெருமளவு குறையும்.
மேலும், வாசிக்க: