திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள விஜயகுமார் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஏபிபி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், 

 

திருவாரூர் மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் அதிகமாக உள்ளனர், அதனால் அவர்களிடம் கந்துவட்டி வாங்கி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவும் தயங்குகின்றனர். பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக வட்டிக்கு பணம் வாங்கும் நிலையில் ஏழை, எளிய மக்கள் அதிக வட்டி தொகையை திருப்பி கொடுக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை தடுக்க திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனின் வழிகாட்டுதலின் படியும் தஞ்சாவூர் டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் அறிவுரையின் படியும் கந்துவட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம், கந்துவட்டி வசூலித்த நபர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குண்டர் தடுப்பு சட்ட கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், புகார் அளிக்கும் நபர்களின்  பெயர் மற்றும் விலாசம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் கூறினார். 



 

மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை பொறுத்தவரை, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமை செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மற்றும் அவரை சார்ந்த விவரங்கள் முழுவதுமாக யாருக்கும் தெரியாத வகையில் பாதுகாக்கப்படும்.

 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர் பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் 43 இருசக்கர வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மன உளைச்சல், மற்றும் மன அழுத்தம் வராமல் இருப்பதற்காக தமிழக காவல்துறை தலைவர் வாரத்திற்கு ஒரு நாள் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்பதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் திருமணநாள், பிறந்த நாள் கொண்டாடும் காவல்துறையினர் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக விடுமுறை அளிப்பது நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. 

 

கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். மேலும் அரசின் உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் இருப்பவர்கள் மீதும் ஒரே இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூறினால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.