கொரோனா ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மின்னணுத் தகவல்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் முன்னதாக வெளியிட்டது. பாடப்புத்தகங்களை படிப்படியாக டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், உரை, ஒலி அமைவுகள், காணொலிகள், சைகை மொழிகள் என்ற பல்வேறு வடிவங்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மின்னணு பாடப்புத்தகங்கள் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு பள்ளிகளை மூடுவதற்கு வழி வகுத்ததுடன், பள்ளிகளில் பயிலும் நாட்டின் 240 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைப் பாதித்துள்ளது. இந்தப் பள்ளி மூடல்கள் நீட்டித்திருப்பது கற்றல் இழப்பை ஏற்படுத்தக்கூடும். தொற்றுநோயின் தாக்கத்தைத் தணிக்க, பள்ளிகள் கற்பித்தல் மற்றும் கற்றலில் இதுவரை கடைபிடித்த வழிமுறையை மறு வடிவமைப்பது மட்டுமல்லாமல், பள்ளியில் வழங்கப்படும் கல்வி போல, வீட்டிலேயே தரமான கல்வியை வழங்குவதற்கான பொருத்தமான PRAGYATA வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டது. குறிப்பாக, சிறப்பு உதவிகள் தேவைப்படும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை உறுதி செய்யும் பொருட்டு இந்த வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டன.
என்சிஇஆர்டி குழுவின் புத்தகங்கள் அனைத்தும் சைகை மொழியில் கிடைக்கப்பெறும் வகையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுக்கும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2021 பிப்ரவரி 25 வரை, 1 முதல் 5 பாடப்புத்தகத்தில் இருந்து சுமார் 300 வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பிரதமரின் இ-வித்யா திட்டம் மூலம் டிஜிட்டல்/ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் 1 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்காக ‘திக்ஷா’ என்ற டிஜிட்டல் தேசிய தளம் உருவாக்கப்பட்டது. இவற்றை இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் அணுக முடியும். இதன் மூலம் ஏராளமான பாடத்திட்டங்களையும், புத்தகங்களையும், க்யூ.ஆர் குறியீடு மூலம் பெற முடியும். இது பள்ளி கல்விக்கான ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் தளம்.
இணைய இணைப்பு இல்லாதவர்கள் டி.வி. மூலம் ஸ்வயம் பிரபா டிடிஎச் சேனல்கள் உதவின. உயர்தர கல்வி நிகழ்ச்சிகளை 32 சேனல்கள் ஒளிபரப்பின. ஸ்வயம் இணையதளத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 92 பாடத்திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில் 1.5 கோடி மாணவர்கள் பதிவு செய்து பயனடைந்தனர். ஆன்லைன் வசதியை பயன்படுத்த முடியாத தொலைதூர மாணவர்களுக்கு, ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. 289 ரேடியோ நிலையங்கள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடங்களை ஒலிபரப்பின. சிக்ஷாவாணி என்ற ‘பாட் காஸ்ட்’ மூலம் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் ஆடியோ மூலம் வழங்கப்பட்டன.
காது கேளாத மாணவர்களுக்கு ஒரு டிடிஎச் சேனல் கல்வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. கண் தெரியாத மற்றும் காது கேளாத மாணவர்களுக்கு பாடங்கள் டிஜிட்டல் வழியில் இணையதளம் மூலமாக வழங்கப்பட்டன.
கொரோனா பெருந்தொற்று அனைத்து வகையான மக்களை பாதித்து இருந்தாலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் அதிப் (ADIP) திட்டத்தின் கீழ் உதவி பெறும் பயனாளர்களை கண்டறிவதற்கும், உதவிகளை வழங்குவதற்கும் சிறப்பு நடைமுறைகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டது.
தொடர்ந்து வாசிக்க:
7.5 reservation | தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு
Periyar's writings on Kindle: இனி அமேசான் கிண்டிலில் பெரியார்.. - ஜென் -Z தலைமுறைகள் கவனத்துக்கு!