Thanjavur Pass Percentage, TN 12th Result 2023: தஞ்சை மாவட்டத்தில் 12 வகுப்பு தேர்ச்சி சதவீதம் 95.18 ஆகும். இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். 


இவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை. தேர்வு முடிந்ததும், விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 79 மையங்களில் விறுவிறுப்பாக நடந்தது. 


முன்னதாக மே 5-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவுகள் 8-ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் வெளியிட்டார். 9.30 மணிக்கே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அமைச்சர் வருவதற்கு அரைமணி நேரம் தாமதம் ஆனது. இதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வருத்தமும் தெரிவித்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதில் தஞ்சை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 212 மாணவர்கள், 14 ஆயிரத்து 323 மாணவிகள் என 27037 மாணவ -மாணவிகள் பிளஸ்-2  பொதுத்தேர்வை எழுதி இருந்தனர். இதில் 25734 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆகும். இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிக மதிப்பெண் பெற்றதையும். தேர்ச்சி அடைந்ததை கொண்டாடும் வகையில் ஆசிரிய- ஆசிரியைகளுக்கு இனிப்புகள் வழங்கி  மாணவ-மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.