Tamil Nadu SSLC Result 2023 Date: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி மாற்றப்படுவதாகவும் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், 19ஆம் தேதி வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ’’10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும். 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாகும்.
இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், ஏப்ரல் 19ஆம் தேதி இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்’’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வு
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றன.ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 10 ஆங்கிலம், ஏப்ரல் 13- கணிதம், ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள் மற்றும் ஏப்ரல் 17- அறிவியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.
மே 19ஆம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள்
இந்த நிலையில் இன்றுடன் (ஏப்ரல் 20) சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது. இதற்கிடையே ஏப்ரல் 25 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்தப் பணி மே 3ஆம் தேதி வரை 7 வேலை நாட்களுக்கு நடைபெற்றது. இதன்பிறகு மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 47, 934 பேர் தோல்வியடைந்த நிலையில், அவர்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி துணைத் தேர்வுகள் தொடங்க உள்ளன.