அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தில் 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5 -ம் தேதி வெளியிட, ஏற்கெனவே தேர்வுத் துறை திட்டமிட்டது. ஆனால், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தாமதம் காரணமாக வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர், மே 7-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. மே 7-ம் தேதி, நீட் தேர்வு நடப்பதால் அதற்கு முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்பதால் இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, 12ம் பொதுத் தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். மொத்தமாக 94.03 சதவீதம் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.45 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12-ம் பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 93.76 சதவீததம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2வது இடம் திருப்பூர் மாவட்டமும், 3வது இடம் பெரம்பலூர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட முழுவதும் மாணவர்கள் 4 ஆயிரத்து 594 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 743 பேரும் என மொத்தம் 10 ஆயிரத்து 337 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 977 மாணவர்களும், 5 ஆயிரத்து 342 மாணவிகளும் என 9 ஆயிரத்து 319 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 86.57 சதவீதமும், மாணவிகள் 93.02 சதவீதம் என வழக்கம்போல் பெண் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்களை விட மாணவிகள் 7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.