பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி, துணை பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்து அசத்தி உள்ளார்.
கர்நாடகா மாநிலம் தும்கூரை மாவட்டத்தை சேர்ந்தவர் கிரீஷ்மா. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் படிப்பில் கில்லாடி. முடிபிடாரேவில் உள்ள ஆல்வாஸ் பள்ளியில் படித்து வந்த கிரீஸ்மா, 9 ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் 95 சதவீத மதிப்பெண்களை பெற்றவர். கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்து வந்த அவருக்கு பெற்றோரால் பள்ளி கட்டணத்தை செலுத்த இயலவில்லை. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பள்ளி கட்டணமான ஒரு லட்சம் ரூபாய் கிரீஷ்மாவின் ஏழை குடும்பத்துக்கு பெரும் தொகையாக இருந்தது.
இருந்தாலும் மனம் தளராமல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த கிரீஷ்மாவுக்கு பேரிடியாக அமைந்தது பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை. நன்றாக படிக்கும் மாணவி என்று தெரிந்து கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்ற ஒரே காணத்துக்காக கிரீஷ்மாவை தேர்வு எழுத பள்ளி அனுமதிக்கவில்லை. இதனை அறிந்த அவரது பெற்றோர் கர்நாடக கல்வித் துறை அமைச்சர் வரை அனுகினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மனம் உடைந்தார் கிரீஸ்மா. நன்றாக படித்தும், திறமை இருந்தும், பணம் காரணமாக தனக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லையே என மனம் நொந்தார். இறுதியாக யாரும் தங்கள் வாழ்நாளில் நினைத்தே பார்க்கக்கூடாத தவறான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார் கிரீஸ்மா. ஆனால், உடனடியாக அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால், உயிர் பிழைத்தார்.
இது கர்நாடக ஊடகங்களின் தலைப்புச் செய்தியானது. தகவலறிந்த அம்மாநில அமைச்சர் கிரீஸ்மாவின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான துணை தேர்வுகளில் கிரீஸ்மா பங்கேற்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கடந்த மாதம் நடந்து முடிந்த துணை பொதுத் தேர்வில் 53,155 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 625 மதிப்பெண்களுக்கு 599 மதிப்பெண்களை எடுத்து அசத்தியுள்ளார் கிரீஸ்மா. இது குறித்து பேசியுள்ள அவர், “எனக்காக உதவி செய்த அனைவருக்கும் நன்றி. நான் முன்பு தவறான முடிவை எடுத்தேன். பின்னர் தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றிபெற்றுள்ளேன்.” என்றார்.
ஒரு வினாடியில் எடுக்கப்படும் தற்கொலை முடிவு எவ்வளவு தவறானது என்பதற்கு கிரீஸ்மாவின் இந்த வாழ்க்கை பாடமாக அமைந்துள்ளது.
தற்கொலை எண்ணங்கள், மன அழுத்தங்கள் ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 104 என்ற உதவி எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.