டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் தற்போது பங்கேற்று ஆடி வரும் இந்திய அணியினர் ஐக்கிய அரபு அமீரகத்திலே தங்கியுள்ளனர். இந்திய அணி வரும் 24-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி விவரத்தை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்திய கிரிக்கெட் அணியில் தோனியின் வருகைக்கு கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜே ஷா, டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு வழிகாட்டியாக செயல்படுவதற்கு தோனி எந்த ஊதியமும் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ஐபிஎல் தொடர் வரும் அக்டோபர் 15-ம் தேதி முடிவடைகிறது. ஐபிஎல் தொடரை அடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்க உள்ளனர். சூப்பர் 12 க்ரூப் 2-ல் இடம் பிடித்திருக்கும் இந்திய அணி, அக்டோபர் 24-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கின்றது. டி-20 உலகக்கோப்பையை வென்றுள்ள தோனியின் பதவி எப்படியானது? இந்திய அணிக்கு என்ன பலன்? பார்ப்போம்!
ஆலோசகர் vs பயிற்சியாளர்
ஓர் அணியின் பயிற்சியாளர் அந்த அணி வெற்றி பெறுவதற்கான யுக்திகளையும், அதை நிறைவேற்றுவதற்கான முறையான கிரிக்கெட்டிங் டெக்னிக்குகளையும் வகுத்து தருபவர். கிட்டத்தட்ட அணி ஆலோசகரின் பணியும் இது போன்றதொரு வேலைதான் என்றாலும், அணி ஆலோசகர் வீரர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கை ஊட்டி ஒவ்வொரு வீரரின் பலம் பலவீனங்களை போட்டியின்போது எப்படி பயன்படுத்தி கொள்ளலாம், எப்படி சமாளிக்கலாம் என்பதை விளக்குபவர். அதுமட்டுமின்றி, இக்கட்டான சூழலில் எந்த மாதிரியான முடிவுகளை எடுத்தால் அது அணிக்கும், அணியின் வெற்றிக்கு சாதகமாகவும் இருக்கும் என்பதை சொல்லி தருபவர்.
தோனி ஸ்பெஷல்
போட்டியின் பரபரப்பான சூழலிலும், நிதானமாக முடிவு எடுத்து போட்டியை கைப்பற்றுவதற்கு பெயர்போன தோனி, இளம் வீரர்களுக்கு இது குறித்த ஐடியாக்களை தோனி பகிர்ந்து கொள்வது இந்திய அணிக்கு ப்ளஸ். 2007 டி-20 உலகக்கோப்பை, 2011 ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மூன்று உலகக்கோப்பைகளை வென்ற கேப்டானான தோனி, 2021 உலகக்கோப்பையை இந்திய அணி தட்டிச்செல்ல துருப்புச்சீட்டாக செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்