முதல்வர் தலைமையில் இன்று நடக்கும் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர் 8 ஆம் தேதி) பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 2021ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்றி, அரசாணை வெளியிட்டு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
பணி நிரந்தரம் செய்யாமல் 42 மாதங்கள்
ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை அரசாணைகளாக்க வேண்டும் என முதல்வர் தலைமையில் 16-09-2021 அன்று நடந்த அரசு செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 2 முறை பள்ளிக் கல்வித்துறை சார்பில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டம் நடத்தி கோரிக்கை பெறப்பட்டது. ஆனால் எந்த வாக்குறுதியும் இதுவரி நிறைவேற்றப்படவில்லை. பணி நிரந்தரம் செய்யாமல் 42 மாதங்கள் முடிந்துவிட்டது.
இதற்கிடையே 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பணி நிரந்தரம் கேட்டு பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 2,500 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் 10 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். இதில் 10 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடும் இதுவரை அளிக்கப்படவில்லை.
இதையும் வாசிக்கலாம்: PM Vidyalaxmi Scheme: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.10 லட்சம் பிணையில்லாக் கடன்; பிரதமர் வித்யாலட்சுமி திட்டம் பற்றி தெரியுமா?
மே மாதம் இல்லாத சம்பளம்
அதேபோல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இந்த காலத்தில் மிகவும் குறைவாக 12,500 ரூபாய் சம்பளம் போதுமானதாக இல்லை.
12 ஆண்டுகளாக தற்காலிக நிலையில் பகுதிநேர ஆசிரியர்களாக,
3,700 உடற்கல்வி ஆசிரியர்கள்,
3,700 ஓவியம் ஆசிரியர்கள்,
2 ஆயிரம் கணினி ஆசிரியர்கள்,
1,700 தையல் ஆசிரியர்கள்,
300 இசை ஆசிரியர்கள்,
20 தோட்டக் கலை ஆசிரியர்கள்,
60 கட்டிடக் கலை ஆசிரியர்கள்,
200 வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களில் 2012 முதல் 12 ஆயிரம் பேர் தற்காலிக ஆசிரியர்கள் ஆகப் பணிபுரிகின்றனர்.
12 ஆண்டுகளாகப் பணிபுரியும் 12 ஆயிரம் பேருக்கும் காலமுறை சம்பளம், பணி நிரந்தரம் என பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதை இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: TNPSC CTSE: தயாரா தேர்வர்களே; அடுத்த தேர்வு தேதியை அறிவித்த டிஎன்பிஎஸ்சி- இதோ விவரம்!